Asia cup 2022: சூப்பர் 4 முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை பழிதீர்த்த இலங்கை
லீக் ஆட்டத்தில் பெற்ற தோல்விக்கு இலங்கை அணி சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை பழிதீர்த்து கொண்டது. முதல் ஆட்டத்தில் அசத்தலான பெளலிங்கால் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, சூப்பர் 4 சுற்று போட்டியில் சொதப்பல் பெளலிங்கால் தோல்வியை தழுவியுள்ளது.
டி20 போட்டியை பொறுத்தவரை டாஸின் பங்கு முக்கியத்துவமானதாக உள்ளது. டாஸ் வெல்லும் அணி பெரும்பாலும் முதலில் பெளலிங் செய்யவே விரும்புகின்றன. இதற்கு முக்கிய காரணமாக இலக்கை முன்னரே அறிந்து கொண்டு அதற்கு ஏற்பட ஆட்டத்தை வெளிப்படுத்துவதுதான்.
முதல் லீக் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பெளிலிங் செய்து இலங்கையை பந்தாடியது. இதைத்தொடர்ந்து ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் இரண்டாவது முறையாக மோதின. இம்முறை டாஸ் வென்ற இலங்கை பெளலிங்கை தேர்வு செய்தது.
ஆனால் ஆப்கானிஸ்தான் இலங்கை போல் இல்லாமல் சிறப்பாகவே பேட் செய்தது. ஓபனிங் பேட்ஸ்மேன் ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் 12 ரன்களில் வெளியேறிய போதிலும், மற்றொரு ஓபனர் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் மூன்றவதாக களமிறங்கிய இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் சிறப்பாக பார்னர்ஷிப் அமைத்தனர்.
இரண்டாவது விக்கெட்டுக்கு 83 ரன்கள் பார்னர்ஷிப் அமைத்தனர். ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 84 ரன்கள் எடுத்தார். அவர் அவுட்டாகும்போது ஆப்கானிஸ்தான் ஸ்கோர் 15. 3 ஓவர்களில் 139 என இருந்தது.
இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு சரியான பினிஷ் அமையவில்லை. முதலில் சொதப்பிய இலங்கை பெளலர்கள் கடைசி கட்டத்தில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை ரன்கள் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தினர். நன்கு செட்டாகி விளையாடி வந்த இப்ராஹிம் சத்ரானும் 40 ரன்களில் வெளியேறினார்.
இதனால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. கொஞ்சம் கடினமான இந்த இலக்கை துரத்தில் இலங்கை அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர் ஓபனர்கள் பாத்தும் நிஸ்ஸங்க - குஷால் மென்டீஸ். இருவரும் முறையே 35, 36 ரன்கள் எடுக்க பவர் ப்ளே ஓவர்கள் முடிவிலேயே 60 ரன்களை கடந்தது இலங்கை.
இதன் பிறகு கேப்டன் தசுன் ஷனக்க 33, பனுக்கா ராஜபட்சவின் அதிரடியான 31 ரன்கள் என டார்கெட்டை நோக்கி இலங்கை முன்னேறியது. முதல் ஆட்டத்தில் மெஜிக் காட்டிய ஆப்கானிஸ்தான் பெளலிங் இந்த முறை பலிக்கவில்லை.
19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றது. முதல் போட்டியில் பெற்ற படுதோல்விக்கு பழிதீர்த்துக்கொண்டது.