தமிழ் செய்திகள்  /  Sports  /  Asia Cup 2022: List Of Reason Behind Defeat Agaist Paksitan In Super 4 Match

Asia cup 2022:பாக். அணிக்கு எதிராக தோல்வி அர்ஷ்தீப் மட்டும் காரணமல்ல!இதுவும்தான்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 05, 2022 11:29 PM IST

பாகிஸ்தான் அணிக்கு எதிராக சூப்பர் 4 போட்டியில் இந்தியா அணி பெற்ற தோல்விக்கு அர்ஷிதீப் சிங் விட்ட கேட்ச் பற்றி பூதாகரமாக பேசப்படுகிறது. ஆனால் அணி தேர்விலிருந்து, பேட்டிங், பெளலிங் என அனைத்திலும் சொதப்பியதே தோல்விக்கான முக்கிய காரணங்களாக உள்ளது.

India's players leave their field after lossing the Asia Cup Twenty20 international cricket Super Four match between India and Pakistan at the Dubai International Cricket Stadium in Dubai on September 4, 2022. (Photo by KARIM SAHIB / AFP)
India's players leave their field after lossing the Asia Cup Twenty20 international cricket Super Four match between India and Pakistan at the Dubai International Cricket Stadium in Dubai on September 4, 2022. (Photo by KARIM SAHIB / AFP) (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

ரிஸ்வான் மற்றும் நவாஸ் இடையே கூட்டணி நீடித்தபோதும் அவர்களை பிரிக்க நாங்கள் பொறுமையாக இருந்தோம். ஆனால், அந்தக் கூட்டணி சற்று நீண்ட நேரம் நீடித்துவிட்டது. இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இரண்டாவது இன்னிங்சின் போது பிட்ச் மாறிவிட்டது என்பதையும் அது அவர்களுக்குச் சாதகமாக இருந்தது என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம் என்றார்.

சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியடைந்து நெருக்கடி நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்த சுற்றில் இனி வரும் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் வெல்வதோடு மட்டுமில்லாமல், சிறப்பான ரன் ரேட்டை பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

எந்தவொரு போட்டியின் தோல்வியும் இரண்டாவது இன்னிங்ஸில் செய்த தவறுகளை மட்டுமே அதிகமாக சுட்டிக்காட்டப்படும். அத்தோடு குறிப்பாக கடைசி கட்டத்தில் நிகழ்ந்த பரபரப்பான தருணங்களே அதிகம் விவாதிக்கப்படும்.

ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியின் அணி தேர்வு, முதல் பேட்டிங், பெளலிங், பீல்டிங் என அனைத்திலும் அடுத்தடுத்து தவறுகளை செய்துள்ளது.

காயம் காரணமாக ஜடேஜா விலகிய நிலையில் இடது கை பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக, ஆப் ஸ்பின் ஆப்ஷனாக தீபக் ஹூடா, மோசமாக செயல்பட்ட ஆவேஷ் கானுக்கு பதிலாக மற்றொரு லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். ஹர்திக் பாண்ட்யாவும் அணிக்கு திரும்பியிருந்தார்.

ஸ்பின்னை எளிதாக எதிர்கொள்ளும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு வலது கை லெக் ஸ்பின்னர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். ஜடேஜாவுக்கு மாற்றாக அக்‌ஷர் படேல் இருந்தும் தீபக் ஹூடா களமிறக்கப்பட்டார். சிறப்பாக பேட்டிங் செய்யப்பகூடியவர், ஆப் ஸ்பின் பந்து வீசவும் செய்வார் என்ற ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிப்பதற்கு பதிலாக ஹூடாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்தியாவின் இந்த இரண்டு திட்டங்களும் பலன் அளிக்காமல் போனது. பிஷ்னோய் சிறப்பாக பந்து வீசினாலும், சஹால் ரன்களை வாரி வழங்கினார். இருவரும் சேர்ந்து 8 ஓவருக்கு 69 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆறாவது பெளலிங் ஆப்ஷனாக சேர்க்கப்பட்ட தீபக் ஹூடா ஒரு ஓவர் கூட வீசவில்லை. இத்தனைக்கும் ஃபகார் ஜமான், முகமது நவாஸ், குஷ்தில் ஷா என அடுத்தடுத்து இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தும் அவர்களுக்கு வசதியான பிஷ்னோய், சஹால் ஓவர்களை வழங்கினார் கேப்டன் ரோஹித்.

துபாயில் டாஸ் வெல்லும் அணி, யார் முதலில் பேட் செய்வது என்பதை முடிவு செய்வது மட்டுமல்ல, யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கும் விதமாக அமைந்துள்ளது. சமீபத்தில் அங்கு நடந்து போட்டிகள் இதற்கு சிறந்த சாட்சியாக அமைந்துள்ளன.

அந்த வகையில் டாஸ் வெல்லும் அணி யோசிக்காமல் முதல் பெளிலிங்கை தேர்ந்தெடுக்கும் அதே முடிவை எடுத்தார் டாஸ் வென்ற பாகிஸ்தான் பாபர் அசாம். ஆனால் இந்தியா போன்று வலுவான அணிகள் விளையாடும்போது க்ளிஷேவான முடிவுகளில் மாற்றங்கள் நிகழ்வுது இயல்புதான் என்றால், பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் அப்படியொரு மேஜிக்கை அளிக்க தவறியது இந்திய அணி.

முதலில் பேட்டிங் என்றாலும் நல்ல தொடக்கத்தை கேப்டன் ரோஹித் - கேஎல் ராகுல் அளித்தனர். 6 ஓவர்களுக்கு 60 ரன்கள் மேல் வைத்து 10 ரன்ரேட்டுக்கு மேல் சென்று கொண்டிருந்த அணியின் ஸ்கோர் மெல்ல சறுக்கியது. இதற்கு பாகிஸ்தானின் பெளலிங் எந்த விதத்திலும் காரணம் இல்லை. மாறாக இந்திய பேட்ஸ்மேன்கள் முதலில் காட்டிய அதிரடியை பின்னர் மிடில் ஓவர்களிலும், கடைசி கட்டத்தில் தொடராமல் போனதே முக்கிய காரணமாக அமைந்தது.

கோலி பார்முக்கு திரும்புவதற்கு தனது இயல்பான ஆட்டத்தை விடுத்து கொஞ்சம் நிதானமாகவே ஆடி வருகிறார். ஆனால் அவர் இந்தப் போட்டியில் காட்டிய நிதானம் என்பது வழக்கத்துக்கு மாறானது மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு பாதகமாகவே அமைந்தது.

இதுவரை தனது இன்னிங்ஸில் செய்யாத விஷயத்தை கோலி இந்தப் போட்டியில் செய்தார். புதிதாக வந்த ரவி பிஷ்னோய்க்கு ஸ்டிரைக் கொடுக்காமல் கடைசி ஓவரில் அவரே பேட் செய்ய நினைத்தார். இதனால் முதல் நான்கு பந்துகள் டாட் ஆகின. இடையில் சிங்கிள் அடிப்பதற்கான வாய்ப்பு அமைந்து கோலி நிரகரித்தது ஆச்சர்யமாகவே இருந்தது.

இதுபோன்ற தருணங்களில் கிடைப்பதெல்லாம் ரன்கள் எனவே பேட்ஸ்மேன்கள் நினைப்பார்கள். ஆனால் டி20 போட்டிகளில் சிங்கிள், டபுள் எல்லாம் கடைசி நேரத்தில் ரன்களாகவே பார்க்கப்படாமல் இருப்பது ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் செய்யும் மகா தவறு.

அதுவும் டார்கெட் செட் செய்யும்போது கிடைக்கும் ஒவ்வொரு ரன்களும் ரத்தின கற்கள் போன்றதே. கோலி நிராகரித்த ரன் கிடைத்திருந்தால் கூட இந்தியாவுக்கு கூடுதலாக ஒரு ரன் கிடைத்திருக்க கூடும். கடைசி ஓவரில் மட்டுமல்ல, அரைசதம் அடிப்பதற்கு முன்னரும் பவுண்டரிகளை விட சிங்கிள் எடுத்தப்பதிலேயே மும்முரமாக இருந்தார்.

முதலில் இந்தியாவுக்கு கிடைத்த தொடக்கத்துக்கு 200 ரன்களுக்கு மேல் அசால்டாக அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 181 ரன்கள்தான் அடித்தது. அப்படி பார்க்கையில் 20 ரன்கள் குறைவாக இந்திய எடுத்திருந்தபோதிலும் இது நல்ல ஸ்கோர் என ரோஹித் கூறியது வேடிக்கையாகவே இருந்தது.

சரி, பேட்டிங்கில்தான் சரியான பினிஷிங் அமையவில்லை என்றால், பெளலிங்கில் அதை விட மோசம். இந்தியாவை போல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பவர்ப்ளேயிலேயே 50 ரன்களை கடக்கும் விதமாகவே இந்தியாவின் தொடக்க பெளலிங் மோசமாக அமைந்தது. ஆனால் முதலில் விட்ட ரன்கள் மிடில் ஓவர்களில் கொஞ்சம் கட்டுப்படுத்தினாலும் விக்கெடுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுக்க தவறினர் இந்திய பெளலர்கள்.

சிறப்பாக பார்னர்ஷிப் அமைத்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் கடைசியில் பார்த்துக்கொள்ளலாம் என்பதில் தெளிவாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் ரன் சேர்ப்பதையும், விக்கெட்டுகளை வீழ்த்தவும் எந்த விதமான நெருக்கடியும் கொடுக்காமல் இருந்தார் கேப்டன் ரோஹித்.

கடைசி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி அதை பல முறை நிரூபித்தும் காட்டிய புவனேஷ்வர் குமாரை யாரும் எதிர்பாராத விதமாக 19வது ஓவரிலேயே வீச வைத்தார் ரோஹித். அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் விளாசப்பட்டது.

ஐசிசியின் புதிய விதமுறை முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை காவு வாங்கியது போல் இந்த முறை இந்தியா அதற்கு இரையானது. குறிப்பட்ட நேரத்துக்குள் பந்து வீச முடியாததால் கூடுதலாக ஒரு பீல்டர் வட்டத்துக்கு வெளியே நிறுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் விளைவு இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தது.

மிக முக்கியமான தருணமாக ஹர்ஷ்தீப் பிடிக்காமல் தவறவிட்ட கேட்ச் மிகப் பெரிய திருப்புமுனையாகே அமைந்தது. கேட்ச் பயிற்சி மேற்கொள்ளும்போது வந்த அந்த பந்தை தவறவிட்டது மன்னிக்க முடியாத என்றாலும் இதுபோன்ற எளிமையான கேட்ச்களை யுவராஜ், தோனி போன்ற ஜாம்பவான்களே தவறவிடுவது இயல்புதான். அதிலும் அழுத்தம் நிறைந்த இந்தப் போட்டியில் இவ்வாறு தவறுகள் நிகழ்வது வாடிக்கைதான் என்றாலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்றாலும் மறுக்க முடியாது.

3 பந்துகளுக்கு 2 ரன் இருக்கும்போது இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்றார் தோனி. இதே பாகிஸ்தானுக்கு எதிராக 2 பந்துகளுக்கு 1 ரன் தேவைப்பட்டபோதிலும் ஆட்டத்தை டையில் முடிக்கும் விதமாக அவரது கேப்டன்சி அமைந்திருந்தது.

ஆனால் கேப்டனாக இந்த இடத்தில் ரோஹித், எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க தவறினார் என்றே சொல்ல வேண்டும். 2 பந்துகளுக்கு 2 ரன் தேவை என்கிற நிலையில், எளிதாக ஒரு பந்து மீதம் இருக்கையில் ஆட்டத்தை எளிதாக முடித்த இந்த போட்டியில் வெற்றிக்கு தகுதியான அணி என்பதை பாகிஸ்தான் நிருபித்தது.

மொத்தத்தில் அணி தேர்விலிருந்து அனைத்திலும் முழு திறமையை இந்திய அணி வெளிப்படுத்தாதன் விளைவே பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியை மற்றும் பெற்று தராமல் அடுத்த வரும் போட்டிகளில் கட்டாய வெற்றி பெற்றாக வேண்டும் என்ற அழுத்தத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்தியுள்ளது.

WhatsApp channel