தமிழ் செய்திகள்  /  Sports  /  Asia Cup 2022: India Will Try To Power The Bowling Unit For Must Win Game Against Sl

Asia Cup 2022:கட்டாய வெற்றியை நோக்கி இந்தியா! இலங்கை திட்டத்தை சமாளிக்குமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 06, 2022 03:14 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிராக இன்றைய போட்டியானது இந்தியாவை பொறுத்தவரை நாக்அவுட் ஆட்டமாகவே அமைந்துள்ளது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் இந்திய அணி நீடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

ஆசிய கோப்பை தொடர் சூப்பர் 4 சுற்றில் இன்றைய போட்டியில் இந்தியா - இலங்கை மோதல்
ஆசிய கோப்பை தொடர் சூப்பர் 4 சுற்றில் இன்றைய போட்டியில் இந்தியா - இலங்கை மோதல்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால் இந்தியா, தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியை தழுவி, இன்றைய போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

கடந்த போட்டியில் அணியில் மேற்கொண்ட மாற்றங்கள் பயன் அளிக்காத நிலையில் இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் இதுவரை சேர்க்கப்படாத ஸ்டிரைக் பெளலரான அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை அணியும் ஸ்பின்னர்கள் எளிதாக எதிர்கொள்வார்கள் என்பதால், ஹாங் காங் அணிக்கு எதிராக ரன்களை வாரி வழங்கிய ஆவேஷ் கான் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டு வேகப்பந்து வீச்சை கேப்டன் ரோஹித் வலுப்படுத்துவார் என தெரிகிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி தொடரில் நீடிக்க முடியும். இதில் இலங்கை வென்றால், அடுத்த வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி வெறும் சம்பிரதாய ஆட்டமாகவே நடைபெறும்.

இந்தியாவை போல் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை பிரகாசம் ஆக்கி கொள்ளும் முயற்சியில் இலங்கை அணியும் தீவிரம் காட்டி வருகிறது. இளம்படையை கொண்டுள்ள இலங்கை அணியில் குஷால் மெண்டிஸ், பனுக்கா ராஜபட்ச ஆகியோரின் ஆட்டம் பேட்டிங்குக்கு வலு சேர்ப்பதாகவே உள்ளது. பந்துவீச்சிலும் ஹசரங்கா டி சில்வா, தனஞ்ஜெய டி சில்வா, மகேஷ் தீக்‌ஷனா ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தலைவலியாக இருப்பார்கள்.

இதையடுத்து இன்றைய போட்டி பற்றி இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனக கூறும்போது,

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். கடைசி நேரத்தில் செய்த தவறுகளே தோல்வி அடைய செய்தது. இதனால் அவர்கள் அழுத்தத்துடன் இருப்பார்கள் என்று உறுதியாக கூறிவிட முடியாது.

பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை அமைப்பதன் மூலம் இந்தியாவை வென்றுவிடலாம் என நம்புகிறோம். கடந்த போட்டியில் அதை செய்துதான் வெற்றி பெற்றோம். எனவே இந்தியாவுக்கு எதிராக அதை தொடர விரும்புகிறோம்.

இந்தியாவில் மூத்த பந்து வீச்சாளர்கள் இல்லாதபோதிலும் இப்போது இருப்பவர்களை அனுபவம் இல்லாதவர்கள் என்று கூறிவிட முடியாது. ஏனென்றால் அவர்கள் ஏராளமான ஐபிஎல் போட்டிகளை விளையாடியுள்ளார்கள். அந்த அனுபவத்தினால் சவால்களை அளிப்பார்கள் என்றே நம்புகிறேன். அவர்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம் என்றார்.

இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. 

WhatsApp channel