Asia cup 2022: ஐசிசி புதிய விதிமுறையால் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்
ஆசிய கோப்பை தொடர் இரண்டாவது லீக் போட்டியில் குறிப்பிட்ட நேரத்தில் ஓவர்கள் வீசாத காரணத்துக்காக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
துபாய் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா அணி கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார். பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் ஜொலித்த அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தப் போட்டியில் ஐசிசி புதிய விதிமுறைப்படி டி20 ஆட்டத்தை பந்து வீசும் அணி 85 நிமிடங்களுக்குள் முடிக்கவில்லை என்றால் கடைசி 3 ஓவர்களில் 5 பீல்டர்களை வட்டத்துக்குள் நிறுத்த வேண்டும்.
இந்த விதிமுறையானது 2022 ஜனவரி முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டிகளில் இரு அணிகளும் 85 நிமிடங்களுக்குள் 20 ஓவர்களை வீச தவறியது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறை பந்து வீசும் அணிக்கும் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அதுவும் டி20 போட்டிகளில் அதிகமாக ரன்கள் குவிக்கப்படுவதும், சிக்ஸருக்கு முயற்சித்து கேட்ச்சுகளை வருவது கடைசி 3 ஓவர்கள்தான். ஏன் பல போட்டிகளில் இந்த குறிப்பாக 18 அல்லது 19வது ஓவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றியமைத்துள்ளது.
அந்த வகையில் இந்த விதிமுறை மூலம் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அபராதம் செலுத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக இது பாகிஸ்தான் அணிக்கு கடும் வேதனையாகவே அமைந்திருக்கும். ஏனென்றால் ஹர்திக் பாண்ட்யா போன்ற அதிரடியான பேட்ஸ்மேன் களத்தில் இருக்கும்போது, கடைசி மூன்று ஓவர்களில் 4 பீல்டர்களை மட்டும் பவுண்டரிகள் அருகே நிற்க வைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் அவரது விக்கெட்டை வீழ்த்தும் யூகம் அமைப்பதிலும் சிக்கல் எழுந்தது.
இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட பாண்ட்யா 19வது ஓவரில் 3 பவுண்டரியும், 20வது ஓவரில் சிக்ஸரும் அடித்து ஆட்டத்தை முடித்தார். அதேபோல் அவருக்கு முன்னர் ஜடேஜாவும் ஆட்டத்தின் 18வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என அடித்துவிட்டு சென்றார்.