Asia cup 2022: கோலியின் முதல் டி20 சதம்! வெற்றியுடன் நாடு திரும்பும் இந்தியா
1020 நாள்களுக்கு பிறகு சதம், புவனேஷ்வர் குமாரின் அட்டகாசமான ஸ்பெல் என ஆப்கானிஸ்தான் அணியை பந்தாடிய இந்திய வீரர்கள் எந்த டென்ஷனும் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் விளையாடினர். அதுவும் தினேஷ் கார்த்திக் பந்து வீசியதெல்லாம் இதுவரை நடக்காத ஒன்றாக அமைந்தது.
ஆசிய கோப்பை 2022 சூப்பர் 4 சுற்றில் தொடரை விட்டு வெளியேறிய இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் சம்பிரதாய ஆட்டமாக இன்று மோதினர். துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மற்றொரு டாஸ் தோல்வி காரணமாக முதலில் பேட்டிங். ஆனால் இந்த முறை இதுவரை பயன்படுத்தப்படாத புதிய பிட்சில் ஆட்டம் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் கோப்டன் ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, சஹால் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், தினேஷ் கார்த்திக், தீபக் சஹார், அக்ஷர் படேல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். தவிர கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டார்.
ஜெயிச்சாலும், தோற்றாலும் எந்த ஆட்டம் முடிந்தவுடன் பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு இரு அணிகளும் நாடு திரும்ப வேண்டும் என்கிற சூழ்நிலையில்தான். இருப்பினும் இந்தப் போட்டியில் தோல்வியுற்றால் இனி ரசிகர்களிடமிருந்து மட்டுமல்ல கிரிக்கெட் வல்லுநர்களின் விமர்சனங்களிலிருந்து ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என கருதி கொஞ்சம் கவனமாகவே இந்திய வீரர்கள் விளையாடினார்கள்.
இலங்கை தொடங்கி வங்கதேசம், பாகிஸ்தான் என துல்லியமான பெளலிங்கில் மிரட்டிய ஆப்கானிஸ்தானின் பாட்ஷா இந்தியாவிடம் பலிக்கவில்லை. ஏனென்றால் பார்முக்கு திரும்புவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்த கேஎல் ராகுல் மிகவும் எளிதாக பந்தை எதிர்கொண்டு பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி அரைசதமும் அடித்தார்.
மறுபக்கம் கேஎல் ராகுலுடன் தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கிய கோலிக்கு அதே நிலைதான்.விண்டேஜ் கோலியை திரும்பி பார்ப்பது பவுண்டரிகளாக விரட்டி கிளாஸான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேஎல் ராகுல் 62, பின் அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் பேட் செய்து முதல் பந்திலேயே சிக்ஸர் அடுத்த பந்தில் அவுட் என நடையை கட்டினார்.
ஆனால் மிகவும் தீர்க்கமாக விளையாடி வந்த கோலி அரைசதத்தை கடந்து தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஆட்டத்தின் 19வது ஓவரில் ரசிகர்களின் 1020 நாள் காத்திருப்புக்கு விடை அளித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். சிக்லருடன் சதமடித்த அவர், பின்னர் மைதானம் முழுவதும் நிரம்பியிருந்த நீண்ட புன்னகையை வெளிப்படுத்தியது இந்த ஆண்டு ஆசிய கோப்பைக்கான பெஸ்ட் தருணமாக அமைந்தது. கோலியின் சதத்தை வரவேற்று அவருக்கு ரசிகர்கள் பலரும் சாலமிட்டு வாழ்த்தினர்.
அதேபோல் மற்றொரு ரன்குவிப்பில் தத்தளித்து வந்த ரிஷப் பண்ட் ஒரு வழியாக இத்தொடரில் முதல் தடவை 20 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார். அதேபோல் விராட் கோலியும் 122 ரன்கள் எடுத்து அவுட்டாகமல் இருந்தார். கோலி சதம், கேஎல் ராகுல் அரைசதம் எடுக்க 212 ரன்களை குவித்தது இந்தியா.
213 என்ற இமாலய டார்கெட்டை சேஸ் செய்வதற்கான ஆக்சலரேஷனை தொடங்குவதற்குள்ளாகவே அற்புத பந்து வீச்சு மூலம் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை அட்டாக் செய்தார். அவரது மெர்சலான பந்துவீச்சில் 20 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்தது ஆப்கானிஸ்தான். பேட்ஸ்மேன்கள் அனைவரையில் காலி செய்த நிலையில் எஞ்சியுள்ளர்வர் தட்டுத்தடுமாறி ரன்கள் குவித்து வந்தனர்.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் இப்ராஹிம் சத்ரான் என்பவர் மட்டும் இந்திய பெளலர்களின் பந்து வீச்சை தாக்குபிடித்து விளையாடினார். 64 ரன்கள் குவித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதே சமயம் ஆப்கானிஸ்தானும் ஆல்அவுட் ஆகாமல் 20 ஓவர் வரை தாக்குபிடித்தது. மொத்தமாக 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
புவனேஷ்வர் குமார் தனது டி20 கேரியரில் சிறந்த பெளலிங்காக 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொத்தத்தில் பயிற்சி ஆட்டம் போல் நடைபெற்ற இந்தப் போட்டியில் சொதப்பாலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுல், புவனேஷ்வர் குமார் உள்பட சிலர் தங்களது பார்மை முடிந்தளவு மீட்டுள்ளனர்.