Asia Cup 2022: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Cup 2022: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான்

Asia Cup 2022: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 31, 2022 12:33 AM IST

உச்சகட்ட பார்மில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசம் அணியை வீழ்த்தி தொடர்ந்து இரண்டு வெற்றிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக நுழைந்துள்ளது.

<p>சிறப்பாக பார்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பெற செய்த ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இப்ராஹிம் சத்ரான் - நஜிபுல்லா சத்ரன்</p>
<p>சிறப்பாக பார்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பெற செய்த ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இப்ராஹிம் சத்ரான் - நஜிபுல்லா சத்ரன்</p>

சீனியர் வீரர்கள் பலர் காயம் காரணமாக அணியில் இடம்பெறாத நிலையில் சில புதுமுக வீரர்களோடு வங்கதேசம் அணி களமிறங்கியது. ஷகிப் அல் ஹசன் என்ற ஒற்றை வீரரை மட்டும் பெரிதும் நம்பியிருந்த அந்த அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் இடது கை பந்து வீச்சாளர் ஃபசல்ஹக் பாரூக்கி இலங்கை பேட்ஸ்மேன்களை மிரட்டினார். இந்தப் போட்டியில் ஆஃப் ஸ்பின்னர் முஜீப் உர் ரஹ்மான், லெக் ஸ்பின்னர் ரஷித் கான் ஆகியோர் மாறி மாறி வங்கதேச பேட்ஸ்மேன்களை கதிகலங்க செய்தார்கள்.

துபாயைவிட மிகவும் சிறிய மைதானமான ஷார்ஜாவில் இந்தப் போட்டி நடைபெற்றது. மிகப் பெரிய அளவில் வானவேடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆப்கன் பெளலர்களின் பந்து வீச்சால் விக்கெட்டையும் பறிகொடுக்க முடியாமல், ரன்களையும் குவிக்க முடியாமல் தடுமாறினர்.

ஏழாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய மொசாடெக் ஹொசைன் ஓரளவு தாக்குபிடித்து விளையாடி அணியின் அதிகபட்ச ஸ்கோராக 48 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருக்கு அடுத்தபடியாக முகமதுல்லா 25 ரன்கள் எடுத்திருந்தார். இவர்கள் இருவரை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அடித்த ரன்கள் 50ஐ கூட தாண்டவில்லை.

20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு வங்கதேச அணி 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. அபார பந்து வீச்சுடன் முஜீப் உர் ரஹ்மான் வெறும் 16 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், 22 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

மீண்டும் ஒரு குறைவான டார்கெட்டை எந்த பதட்டமும் இல்லாமல் சேஸ் செய்தன் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள். விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் எந்த வித நெருக்கடியிலும் சிக்காமல் சீராக விளையாடி ஆட்டத்தை 18.3 ஓவர்களில் சேஸ் செய்து முடித்தனர். இப்ராஹிம் சத்ரான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடி நஜிபுல்லா சத்ரான் 17 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

உப்புசப்பில்லாமல் சென்று கொண்டிருந்த ஆட்டத்தில் 6 சிக்ஸர்கள் பறக்கவிட்டு கொஞ்சம் வானவேடிக்கை காட்டினார். வங்கதேச பேட்ஸ்மேன்களை ரன் அடிக்க விடாமல் கட்டுப்படுத்திய முஜீப் உர் ரஹ்மான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

குரூப் பி பிரிவில் இடம்பெற்றிருக்கும் ஆப்கானிஸ்தான், தனது பிரிவில் உள்ள இலங்கை, வங்கதேசம் ஆகிய இரு அணிகளையும் வீழ்த்தியுள்ள நிலையில் முதல் ஆளாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இனி இந்தப் பிரிவில் நடைபெற இருக்கும் இலங்கை - வங்கதேசத்துக்கு இடையே நடைபெறும் போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

 

Whats_app_banner
மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.