Asia Champions Trophy Hockey 2023: இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் டிரா! மலேசியாவுக்கு 2வது வெற்றி - யார் டாப்?
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Champions Trophy Hockey 2023: இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் டிரா! மலேசியாவுக்கு 2வது வெற்றி - யார் டாப்?

Asia Champions Trophy Hockey 2023: இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் டிரா! மலேசியாவுக்கு 2வது வெற்றி - யார் டாப்?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 05, 2023 07:04 AM IST

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் மலேசியா அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. மற்ற இரண்டு ஆட்டங்களும் டிராவில் முடிவுற்றன.

ஆசியா சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் இரண்டாம் நாள் ஆட்டம்
ஆசியா சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் இரண்டாம் நாள் ஆட்டம்

அதேபோல், மற்ற போட்டிகளில் தென்கொரியா 2-1 கோல் கணக்கில் ஜப்பான் அணியையும், மலேசியா 3-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தியது.

இதைத்தொடர்ந்து இரண்டாம் நாளில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென் கொரியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில் போட்டி சமனில் முடிந்தது.

இதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மலேசியா - சீனா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மலேசியா அணி அடுத்தடுத்து கோல்கள் அடித்தன. சீனா அணி ஒரேயொரு கோல் மட்டும் அடித்தது. முழு ஆட்ட நேர முடிவில் மலேசியா 5-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பெற்றது.

கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதின. ஜப்பான் முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் அதிலிருந்து மீளும் விதமாக ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய வீரர்களை கோல் அடிக்க விடாமல் கடும் நெருக்கடி அளித்தது.

விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஜப்பான் முன்னிலை பெற்றது. இதையடுத்து இதற்கு பதிலடி தரும் விதமாக ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் இந்தியா தனது முதல் கோலை அடித்தது.

இரு அணிகளும் ஒரு கோல் அடித்த நிலையில் இரண்டாவது கோல் அடிப்பதற்கு கடுமையாக போராடின. ஆனால் அதற்கான பலன் கிடைக்கவில்லை. முழு ஆட்ட நேர முடிவில் 1-1 என சமநிலை பெற்ற நிலையில் இந்த போட்டி டிரா ஆனது.

இந்த தொடரில் பங்கேற்ற ஆறு அணிகலும் தலா 2 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் இரண்டு வெற்றிகளுடன் மலேசியா முதல் இடத்திலும், இந்தியா ஒரு வெற்றியுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

முறையே மூன்று மற்றும் நான்காவது இடத்தில் தென்கொரியா, ஜப்பான் அணிகள் உள்ளன. பாகிஸ்தான், சீனா ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன. புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்தை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இன்று எந்த போட்டிகளும் நடைபெறவில்லை.

நாளை நடைபெற இருக்கும் போட்டியில், சீனா - தென்கொரியா, பாகிஸ்தான் - ஜப்பான், இந்தியா - மலேசியா அணிகள் மோதுகின்றன.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.