Ravichandran Ashwin: சந்தர்பாலை கிளீன் போல்டாக்கி உலக சாதனை புரிந்த அஸ்வின்! கும்ப்ளே தனித்துவமான சாதனையும் முறியடிப்பு
வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கும்ப்ளேவின் நீண்ட நாள் சாதனையை முறியடித்த அஸ்வின், தந்தை - மகன் விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற மற்றொரு அரிய சாதனையும் புரிந்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே முதல் டெஸ்ட் போட்டி டோமினிகாவில் உள்ள ரோசோ மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ், இந்திய சுழலை சமாளிக்க முடியாமல் 150 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய சுழல் கூட்டணியான அஸ்வின் - ஜடேஜா 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. இதில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை எடுத்தார். கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலராக இருந்தார் அஸ்வின். இதையடுத்து இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் முதல் விக்கெட்டை அஸ்வின் தான் வீழ்த்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனும், ஓபனிங் பேட்ஸ்மேனுமான கிரேக் பிராத்வைட் 20 ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வினின் சுழலில் சிக்கினார். இதைத்தொடர்ந்து மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேனான டேகனரின் சந்தர்பாலை கிளீன் போல்டாக்கினார் அஸ்வின். அவர் 12 ரன்களில் அவுட்டானார்.
சந்தர்பால் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் உலக சாதனை புரிந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான ஷிவ்நாரின் சந்தர்பால் மகன்தான் டேகனரின் சந்தர்பால். இதன் மூலம் தந்தை - மகன் விக்கெட்டை வீழ்த்தி பவுலர் லிஸ்டில் இணைந்துள்ளார்.
இதற்கு முன்னதாக இந்த லிஸ்டில் இங்கிலாந்தின் ஐயன் போத்தம், பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார், தென்ஆப்பரிக்காவின் சைமன் ஹார்மர் ஆகியோர் இருந்தனர். இவர்களுடன் தற்போது அஸ்வினும் இணைந்துள்ளார்.
அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் போல்ட் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய முன்னாள் பவுலர் அனில் கும்ப்ளேவின் சாதனையையும் அஸ்வின் முறியடித்துள்ளார். கும்பளே 95 விக்கெட்டுகளை போல்டு மூலம் வீழ்த்தியுள்ளார். இதையடுத்து சந்தர்பால் விக்கெட்டை கிளீன் போல்டாக்கியதன் மூலம் 96 முறை பேட்ஸ்மேன்களை போல்டாக்கியுள்ளார் அஸ்வின்.
இந்த பட்டியலில் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கபில் தேவ் 88 போல்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
அத்துடன் சர்வதேச அளவில் 700 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய மூன்றாவது பவுலராகியுள்ளார் அஸ்வின். இந்த லிஸ்டில் கும்ப்ளே 953 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், ஹர்பஜன் சிங் 707 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்