FIFA 2022: 6ஆவது முறையாக உலகக்கோப்பை பைனலுக்குள் நுழைந்தது அர்ஜெண்டினா
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Fifa 2022: 6ஆவது முறையாக உலகக்கோப்பை பைனலுக்குள் நுழைந்தது அர்ஜெண்டினா

FIFA 2022: 6ஆவது முறையாக உலகக்கோப்பை பைனலுக்குள் நுழைந்தது அர்ஜெண்டினா

I Jayachandran HT Tamil
Dec 14, 2022 07:55 AM IST

குரோஷியாவை வீழ்த்தி உலகக்கோப்பை 2022இன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ஜெண்டினா அணி.

சக அணி வீரரை கட்டியணைத்து வெற்றிக் களிப்பைக் கொண்டாடும் அர்ஜெண்டினா அணி கேப்டன் லயோனல் மெஸ்ஸி
சக அணி வீரரை கட்டியணைத்து வெற்றிக் களிப்பைக் கொண்டாடும் அர்ஜெண்டினா அணி கேப்டன் லயோனல் மெஸ்ஸி

கேப்டன் லியோனல் மெஸ்ஸி தலைமையில் இந்தச் சாதனையை அர்ஜெண்டினா படைத்துள்ளது.

குரோஷியாவை வீழ்த்தியதன் மூலம் 6ஆவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் அர்ஜெண்டினா நுழைந்துள்ளது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டி மொராக்கோ அணிக்கும், பிரான்ஸ் அணிக்கும் இன்று நடைபெறுகிறது.

கோப்பையைக் கைப்பற்றும் ஆட்டம் என்பதால் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் விறுவிறுப்பாக விளையாடின.

ஒரு கட்டத்தில் அர்ஜெண்டினாவின் கால் ஓங்கத் தொடங்கியது.

பந்தை வேகமாகக் கடத்திச் சென்ற அர்ஜெண்டினா வீரர் ஆல்வரஸ் கோல் அடிக்க முயன்றபோது குரோஷியா கோல்கீப்பர் அதைத் தடுத்துவிட்டார். ஆனால் அது ஃபவுல் என்பதால் அர்ஜெண்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு தரப்பட்டது.

பெனால்டி அடிப்பதற்காக கேப்டன் மெஸ்ஸி வந்தார். அவர் பலமுறை பெனால்டியைக் கோட்டை விட்டவர். இதனால் மற்ற வீரர்கள் அவரை கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனார்.

ஆனால் மெஸ்ஸி அந்த வாய்ப்பைப் பிரமாதமாகப்பயன்படுத்தி கோல் அடித்தார்.

1-0 என்ற கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை பெற்றது.

எப்படியாவது சமன் செய்ய வேண்டும் என்ற முனைப்போடு குரோஷிய வீரர்கள் ஆக்ரோஷத்துடன் விளையாடியும் முயற்சி பலனளிக்கவில்லை.

அடுத்த சில நிமிடங்களில் அர்ஜெண்டினா வீரர் ஆல்வரஸ் புயலாக பந்தைக் கடத்திச் சென்று அணியின் இரண்டாவது கோலைப் போட்டார். இதனால் குரோஷிய வீரர்கள் கலகலத்துப் போயினர். இந்நிலையில் ஆட்டத்தின் முதல் பாதி முடிந்தது.

2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வலுவான நிலையில் இருந்தது.

இரண்டாம் பாதியில் குரோஷிய வீரர்கள் கடத்தி வந்த பந்துகளை அர்ஜெண்டினா கோல்கீப்பர் திறம்பட தடுத்து நிறுத்தினார்.

ஆட்டத்தின் 69ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர்கள் கார்டியோ, சோஸா உள்ளிட்ட மூவரைக் கடந்து சென்று கோல்போஸ்ட் அருகே ஆல்வரஸுக்கு பாஸ் செய்தார். அதை ஆல்வரஸ் லாவகமாக கோல் அடித்தார்.

இதன் மூலம் 3-0 என்ற கோல்கணக்கில் அர்ஜெண்டினா முன்னேறியது. பின்னர் ஆட்டத்தில் சொல்லிக் கொள்ளும் வகையில் குரோஷிய வீரர்கள் திறமையைக் காட்டவில்லை.

இறுதியில் 3-0 என்ற கோல்கணக்கில் குரோஷியாவை அர்ஜெண்டினா வீழ்த்தியது.

Whats_app_banner

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.