RCB: 'அப்போ அடுத்த முறை ஈ சாலா கப் கன்பார்ம் தான்' - இந்திய அணியை திணறடித்த பேட்ஸ்மேன் இப்போ ஆர்சிபிக்கு Coach
ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மைக் ஹெசன் விலகிய நிலையில், புதிய பயிற்சியாளர் குறித்த அறிவிப்பை அந்த அணி வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2024 சீசனில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி பிளவர் செயல்படவுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த அவர் கடந்த சில வாரங்களுக்கு முன் பொறுப்பில் இருந்து விலகினார்.
இதைத்தொடர்ந்து ஆர்சிபி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆண்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ஃபாப் டூ பிளெசிஸ் தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐிம்பாப்வே அணியில் 1990களில் முக்கிய வீரராக இருந்து வந்தவர் ஆண்டி பிளவர். விக்கெட் கீப்பர் மற்றும் இடது கை பேட்ஸ்மேனான இவர் பல போட்டிகளை தனியாளாக நின்று அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். குறிப்பாக இந்திய அணிக்கு சிம்ம சொப்பணம் அளிக்கும் வீரராக இருந்துள்ளார்.
மற்ற பேட்ஸ்மேன்களா அவுட்டாக்கினாலும் இவரது விக்கெட்டை வீழ்த்துவதில் இந்திய பவுலர்கள் அடைந்த சிரமத்தை எளிதில் விவரித்து விட முடியாது. ஏனென்றால் அந்நிய பேட்ஸ்மேன்களில் ஸ்பின் பவுலிங்கில் கில்லியாக பேட் செய்ய கூடியவராக இவர் இருந்ததால் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இங்கிலாந்து அணி பயிற்சியாளராக இருந்தார் ஆண்டி பிளவர். இவர் பயிற்சியாளராக செயல்பட்ட காலகட்டத்தில் 2009 ஆஷஷ் தொடர், 2010ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்து வென்றது. டி20 உலகக் கோப்பை தான் இங்கிலாந்து வெற்றி பெற்ற முதல் ஐசிசி கோப்பையாக அமைந்தது. அத்துடன், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கான தரவரிசை பட்டியலிலும் இங்கிலாந்து அணி முதல் இடத்தை பிடித்தது.
ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரை பஞ்சாப் கிங்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்ட இவர், பின்னர் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்தார். அந்த அணி விளையாடியிருக்கும் இரண்டு சீசன்களிலும் ப்ளேஆஃப் வரை தகுதி பெற வைத்தார்.
உள்நாட்டு டி20 லீக்குகளில் இவர் பயிற்சியாளராக செயல்பட்ட அணிகளான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை சேர்ந்த முல்தான்ஸ் சுல்தான்ஸ் அணி 2021 சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்றது. அதேபோல் அபுதாபி டி10 லீக்கில் இவர் பயிற்சியாளராக செயல்பட்ட அணி கோப்பையை வென்றுள்ளது.
தற்போது லக்னோ அணியிலிருந்து விலகிய ஆண்டி பிளவர், ஐபிஎல் 2024 சீசனில் ஆர்சிபி அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை மூன்று முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஆர்சிபி அணி ஒரு முறை கூட கோப்பை வென்றதில்லை. ஒவ்வொரு சீசனிலும் பலமான அணியாகவே இருந்து வரும் ஆர்சிபி, நாக்அவுட்போட்டிகளில் வெளியேறி ஐபிஎல் Chokers அணியாக இருந்து வருகிறது. அதேபோல் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகளை போல் ஏராளமான ரசிகர்களை கொண்ட அணியாகவும் ஆர்சிபி இருந்து வருகிறது.
அந்த வகையில் ஈ சாலா கப் நம்தே என ஒவ்வொரு சீசனையும் ஆராவரத்துடன் ரசிகர்கள் தொடங்குவார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் ஆர்சிபி அணி தொடரை விட்டு வெளியேறுவது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. டி20 கோப்பைகளை பெற்று தந்த ஒருவரை இந்த முறை பயிற்சியாளராக நியமனம் செய்திருப்பதன் மூலம் ஈ சாலா கப் எங்களுக்குதான் என ரசிகர்கள் குஷியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்