Ajinkya Rahane: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் முதல் இந்திய பேட்ஸ்மேனாக ரஹானே நிகழ்த்திய சாதனை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இரண்டாவது முறையாக இந்தியா விளையாடுகிறது. ஆனால் தற்போது முதல் இந்திய பேட்ஸ்மேனாக அரைசதம் அடித்துள்ளார் அஜிங்கியா ரஹானே.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா இடையே லண்டனிலுள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டாப் 4 பேட்ஸ்மேன்கள் 15 ரன்கள் கூட தாண்டாத நிலையில் பெவிலியனுக்கு திரும்பினர்.
இதையடுத்து டெஸ்ட் போட்டிகளில் இருந்து கழட்டிவிடப்பட்டு, மீண்டும் கம்பேக் கொடுத்த அஜிங்கியா ரஹானே பொறுப்புடன் பேட் செய்தார். ஜடேஜாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியில் சரிவிலிருந்து மீட்டார். பின்னர் அரைசதம் அடித்த ரஹானே பவுலிங் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூருடன் இணைந்து முக்கியமான கட்டத்தில் 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
இந்த போட்டியில் 89 ரன்கள் எடுத்து இந்திய அணி பாலோ ஆன் தவிர்க்க முக்கிய காரணமாக அமைந்தார். அத்துடன் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அரைசதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை புரிந்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தற்போது இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. இந்த இரண்டு முறையும் இந்திய அணி தகுதி பெற்றது. முதல் முறையாக 2019-21 சுழற்சியில், 2021 ஜூன் மாதம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிர்கொண்ட இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் ஒரு இந்திய பேட்ஸ்மேன்கள் கூட அரைசதம் விளாசவில்லை. இதில் அதிகபட்ச ஸ்கோராக ரஹானே தான் 49 ரன்கள் அடித்திருந்தார்.
இதையடுத்து 2021 முதல் 2023 சுழற்சிக்கான இறுதிப்போட்டி தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 173 ரன்கள் பின்தங்கியுள்ளது. இருப்பினும் ரஹானேவின் அரைசதத்தால் இந்திய அணி பாலே ஆன் ஆவதை தவிர்த்தது.
ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டம் மூலம் டெஸ்ட் அணிக்கு திரும்பியிருக்கும் ரஹானே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஸ்டார் வீரராகவே இருந்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்