Natarajan: நடராஜன் பந்துவீச்சை எதிர்கொண்ட நடிகர் யோகி பாபு
'இந்த மைதானத்துக்கு நான் வந்தபோது எனது இளம்வயதில் நான் கிரிக்கெட் விளையாடியது ஞாபகத்துக்கு வந்தது.'
சர்வதேச தரத்தில் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் யார்க்கர் மன்னன் நடராஜன் கட்டியிருக்கும் மைதானத்தை கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்.
திரளான கிரிக்கெட் ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டு வந்தனர். இந்த நிகழ்ச்சியில் காமெடி நடிகர் யோகி பாபுவும் கலந்து கொண்டார்.
தினேஷ் கார்த்திக் பந்துவீச யோகி பாபு ஜாலியாக பேட்டிங் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் யோகி பாபு கூறியதாவது:
தமிழ்நாட்டில் நீண்ட காலமாக கிரிக்கெட் வீரர்கள் ஊக்கம் கொடுக்க ஆளில்லாமல் இருந்து வந்திருக்கிறது. ஆனால், நடராஜன் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவு அளிக்க இந்த முயற்சியை எடுத்திருக்கிறார். இந்த முயற்சியின் மூலம், நிறைய வீரர்கள் வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.
அதற்காக எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய திறமையான வீரர்கள் தமிழ்நாட்டில் உருவாகி வருகின்றனர்.
இது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறது என்றார் யோகி பாபு.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி பங்கேற்றார். அவர் கூறியதாவது:
இந்த மைதானத்துக்கு நான் வந்தபோது எனது இளம்வயதில் நான் கிரிக்கெட் விளையாடியது ஞாபகத்துக்கு வந்தது.
விழுப்புரம் பக்கத்தில் இதேபோன்று ஒரு மைதானத்தில் தயார் செய்து கிரிக்கெட் விளையாடியிருக்கிறோம்.
சேலத்தில் இருந்து நடராஜன் எனும் கிரிக்கெட் நட்சத்திரம் உருவாகி இருக்கிறார். அவரை பார்த்து இன்னும் பல வீரர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
உள்கட்டமைப்பு வசதிகள்தான் முக்கியம். அதை செய்து கொடுத்துவிட்டால் நிச்சயம் சாதிப்பார்கள்.
இந்தியாவிற்கு ஐபிஎல் போன்று தமிழ்நாட்டிற்கு டிஎன்பிஎல். இதிலிருந்து தான் நடராஜன், சாய் சுதர்ஷன் போன்ற வீரர்கள் உருவானார்கள்.
நல்ல பிளாட்ஃபார்ம் அமைத்து கொடுத்திருக்கிறோம். வீரர்கள் தான் சிறப்பாக விளையாட வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாவட்டந்தோறு கிரிக்கெட் அகாடெமிகளை அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார் அசோக் சிகாமணி.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்