தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tnpl Final போட்டியை கண்டு ரசித்த நடிகர் அருண் விஜய்!-பிரபல திரைப்பட இயக்குநரும் வந்தார்

TNPL Final போட்டியை கண்டு ரசித்த நடிகர் அருண் விஜய்!-பிரபல திரைப்பட இயக்குநரும் வந்தார்

Manigandan K T HT Tamil
Jul 12, 2023 08:25 PM IST

டி.என்.பி.எல் நிறைவு விழாவின் நிகழ்ச்சிகளைக் காண பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அரங்கிற்கு வருகை தந்தனர்.

டிரம்ஸ் சிவமணி இசை நிகழ்ச்சி நடந்தது, பைனல் போட்டியைக் கண்டு ரசித்த நடிகர் அருண் விஜய்
டிரம்ஸ் சிவமணி இசை நிகழ்ச்சி நடந்தது, பைனல் போட்டியைக் கண்டு ரசித்த நடிகர் அருண் விஜய் (TNPL)

ட்ரெண்டிங் செய்திகள்

ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸன் திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்றுடன் நிறைவடைகிறது. 

இந்த நிறைவு விழாவில் முக்கிய நிகழ்வாக பிசிசிஐ நிர்வாகத்திடமிருந்து ஒரு முறை ஊதியப் பலனைப் (ONE TIME BENEFIT) பெறாத, டி.என்.சி.ஏ நிர்வாகத்தில் இணைந்து தங்களின் முக்கியப் பங்களிப்பை அளித்து வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், போட்டி நடுவர்கள் மற்றும் ஆடுகள பராமரிப்பாளர்களுக்கு உதவும் நோக்கில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஒரு முறை ஊதியப் பலனை இன்று வழங்கியது. இந்த திட்டமானது டி.என்.பி.எல் 2021 முதல் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிகழ்வில் முக்கிய விருந்தினர்களாக, 1983 உலக கோப்பை வெற்றியாளரும் முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரருமான சந்தீப் பாட்டீல், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் டாக்டர்  பி அசோக் சிகாமணி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மாண்புமிகு பொருளாளர் டி.ஜெ ஸ்ரீனிவாச ராஜ் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மாண்புமிகு உதவி செயலாளர் ஆர்.என் பாபா ஆகியோர் கலந்து கொண்டு ஒரு முறை ஊதியப் பலனிற்கான காசோலையை வழங்கி சிறப்பித்தனர்.  

ஒரு முறை ஊதியப் பலனாக 5 இலட்சத்திற்கான காசோலையை தமிழ்நாட்டிற்காக முதல் தர போட்டிகளில் தனது முத்திரையைப் பதித்த முன்னாள் கிரிக்கெட் வீரரான ஏ.ஜி சத்விந்தர் சிங் அவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் டாக்டர் பி அசோக் சிகாமணி மற்றும் சந்தீப் பாட்டீல் ஆகியோர் வழங்கி கெளரவித்தனர். அடுத்ததாக, தமிழக அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரரான அப்துல் ஜாபர் அவர்களுக்கு ஒரு முறை ஊதியப் பலனாக 5 இலட்சத்திற்கான காசோலையை சிறப்பு விருந்தினர்கள் டி.ஜெ ஸ்ரீனிவாச ராஜ் மற்றும் சந்தீப் பாட்டீல் ஆகியோர் வழங்கி கெளரவித்தனர். பின்னர், தமிழ்நாட்டிற்காக தனது அறிமுக ரஞ்சிப் போட்டியில் சதமடித்த அசத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பி. ரமேஷ் அவர்களுக்கு ஒரு முறை ஊதியப் பலனாக 5 இலட்சத்திற்கான காசோலையை சிறப்பு விருந்தினர்கள் ஆர்.என் பாபா மற்றும்  சந்தீப் பாட்டீல் ஆகியோர் வழங்கி கெளரவித்தனர். 

பிசிசிஐ நடுவர் குழுவில் இருந்து பல ஆண்டுகளாக திறம்பட நடுவராக செயல்பட்ட முன்னாள் போட்டி நடுவரான ஆர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு முறை ஊதியப் பலனிற்கான 5 இலட்சத்திற்கான காசோலையை சிறப்பு விருந்தினர்கள் டாக்டர் பி அசோக் சிகாமணி மற்றும் சந்தீப் பாட்டீல் ஆகியோர் வழங்கி கெளரவித்தனர்.

அதன்பின்னர், டி.என்.சி.ஏவில் இணைந்து 45 வருடங்களுக்கும் மேலாக கடுமையாக உழைத்து தலைமை ஆடுகள பராமரிப்பாளராக செயல்பட்ட முன்னாள் ஊழியரான என். அண்ணாமலை அவர்களுக்கு ஒரு முறை ஊதியப் பலனாக 2.5 இலட்சத்திற்கான காசோலையை சிறப்பு விருந்தினர்கள்  டி.ஜெ ஸ்ரீனிவாச ராஜ் மற்றும் சந்தீப் பாட்டீல் ஆகியோர் வழங்கி கெளரவிக்க, இறுதியாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து பயிற்சி நெட்ஸ்களை சிறப்பாக கையாண்டு வந்த ஜெ. தேவராஜ் அவர்களுக்கு ஒரு முறை ஊதியப் பலனாக 2.5 இலட்சத்திற்கான காசோலையை சிறப்பு விருந்தினர்கள் ஆர்.என் பாபா மற்றும்  சந்தீப் பாட்டீல் ஆகியோர் வழங்கி கெளரவித்தனர். 

 இறுதிப்போட்டிக்கு முன்பாக, நிறைவு விழா கொண்டாட்டத்தில் பிரபல ராப் பாடகர் அசல் கோளாறு மற்றும் ராக் டான்ஸ் குழுவினரின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி அட்டகாசமாக அரங்கேறியது. அதன்பின்னர், அரங்கில் கூடியிருக்கும் நெல்லை ரசிகர்களை மகிழ்விக்க X1X டான்ஸ் குழுவின் நடன நிகழ்ச்சியும் சிறப்பாக நடந்து முடிந்தது. மற்றும் இந்தியாவின் மிகச்சிறந்த டிரம்ஸ் இசைக்கலைஞரான டிரம்ஸ் சிவமணியின் துள்ளலான இசை விருந்து அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்தது.

டி.என்.பி.எல் நிறைவு விழாவின் நிகழ்ச்சிகளைக் காண பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அரங்கிற்கு வருகை தந்தனர். அதோடு இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகளால் நெல்லை மாநகரமே விழாக் கோலமாக காட்சியளித்தது. குறிப்பாக இன்றைய நிறைவு விழாவில் கலந்து கொண்டு இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணிக்கு ஆதரவளிக்க லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் ‘மிஷன்’ திரைப்படக்குழுவிலிருந்து இயக்குனர் விஜய் மற்றும் கதாநாயகன் அருண் விஜய் ஆகியோர் வருகை தந்தனர்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்