Vodafone Idea 5G Plans: 5G சேவை அறிமுகப்படுத்தும் திட்டமிடலில் வோடபோன் ஐடியா!
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக 5G சேவையில் வோடபோன் ஐடியா நிறுவனமும் களமிறங்குகிறது. அதற்கான திட்டமிடலை தொடங்கியுள்ள நிலையில், இதன் சேவைகளின் கட்டணம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் 5G சேவையை டெல்லி, கொல்கத்தா, சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கு வரும் தீபாவளி முதல் வழங்க இருப்பதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் ஏர்டெல் நிறுவனமும் 5G சேவையை பயானாளர்களுக்கு வழங்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.
இதையடுத்து இந்தியாவில் மேற்கூறிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்து வரும் வோடபோன் ஐடியா, 5G சேவைக்கான திட்டமிடலை தொடங்கியுள்ளது.
முதலாவதாக அறிமுகப்படுத்துவது என்று இல்லாமல் அடுத்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தும் முயற்சியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் 5G சேவை அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
அதில், நிறுவனம் தற்போது பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்து வருவதால், முதலீட்டாளர்கள் மூலம் நிதி திரிட்டியும், வங்கிகளில் கடன் பெற்று நிதி ஆதாரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தனிநபரிடமிருந்து வரும் வருவாய் அதிகபட்சமாக ஏர்டெல்க்கு ரூ. 183, ஜியோவுக்கு ரூ. 179 என இருக்க வோடபோன் ஐடியா நிறுவனத்துக்கோ ரூ. 128 என மிக அதள பாதலத்திலேயே உள்ளது. இதனால் இந்த நிறுவனத்தின் சேவை கட்டணம் உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே வோடபோன் ஐடியா நிறுவனங்கள், நோக்கியா மற்றும் எரிக்சன் நிறுவனங்களோடு இணைந்து 5G சோதனையை நடத்தியுள்ளனர். தற்போது புதிய 5G சேவைக்கான பணிகளை துவங்காமல் 4Gக்கான கருவிகளை அப்கிரேட் செய்து அதன் மூலம் 5G சேவையை வழங்க திட்டமிட்டு வருகிறது வோடோபோன்.
இந்தியா முழுவதும் தங்களது 4G சேவையை வலுப்படுத்தி வருவதாக கூறியுள்ள அவர்கள், கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் ஆகிய பகுதிகளில் மேலும் 4G அலைவரிசையை வாங்கியுள்ளனர்.