உக்ரைன் போரை தீவிரப்படுத்த வேண்டாம்.. ரஷ்ய அதிபர் புதினுக்கு போன் போட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப், உக்ரைன் போரை தீவிரப்படுத்த வேண்டாம் என ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா போர் 3 ஆண்டுகளை கடந்து நீடிக்கும் இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதும் தொடர் கதையாக நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. இருப்பினும் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போராடி வருகிறது. இருநாடுகளுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த வேண்டாம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு எதிரான தேர்தலில் அவர் வெற்றி பெற்ற சில நாட்களுக்குப் பிறகு, வியாழக்கிழமை புளோரிடாவில் உள்ள தனது மார்-அ-லாகோ தோட்டத்திலிருந்து தொலைபேசி வாயிலாக அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
உக்ரைன் போரை தீவிரப்படுத்த வேண்டாம்
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதையடுத்து டிரம்ப் பல நாட்டு தலைவர்களுடன் பேசியுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனும் அவர் பேசினார். உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
