Thomas Alva Edison : பள்ளியில் நிராகரிக்கப்பட்ட எடிசன்.. 5000 முறை தோல்வி.. தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள் இன்று!
எண்ணிலடங்கா கண்டுபிடிப்புகளை செய்த தாமஸ் ஆல்வா எடிசனின் பிறந்த நாளான இன்று அவரை நாம் நினைவுகூறுவோம்.
தோல்விகளை கடந்தால் தான் வெற்றி. அப்படி பல தோல்விகளை சந்தித்து வெற்றி பெற்றவர்தான் எடிசன். இன்று நாம் வெளிச்சத்தில் இருப்பதற்குக் காரணம் தாமஸ் ஆல்வா எடிசன் தான். மின்சார பல்பை 1879-ல் கண்டுபிடித்தார். கிராமபோன். கினிட்டோஸ்கோப், சினிமா ப்ரொஜக்டா், சிமெண்ட் காங்கிரீட் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தவர்.உலகில் எத்தனையோ அறிவியலாளர்கள் பல கண்டுபிடிப்புகளை மனித சமுதாயத்திற்கு தந்திருந்தாலும் இவர்களில் முதன்மையானவராக விளங்குபவர் தாமஸ் ஆல்வா எடிசன்.
பிப்ரவரி 17 ஆம் தேதி 1847 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் மிலன் எனும் ஊரில் சாமுவேல் எடிசன் மற்றும் ஜான்சி மேத்தியூஸ் ஆகிய இருவருக்கும் 7 ஆவது மகனாக பிறந்தார் எடிசன். தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தபோது அவருக்கு காது கேட்பதில் பிரச்சனை இருந்தது. அதோடு நான்கு வயது வரைக்கும் அவரால் பேச இயலவில்லை.
பிறகு அவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடுகளால் அவர் எட்டு வயதில் தான் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். ஆனாலும் அவரால் பள்ளி படிப்பை முறையாக தொடர முடியவில்லை. தாமஸ் ஆல்வா எடிசனுக்கு மூளை வளர்ச்சி சரியில்லை எனக் கூறி எடிசனை வகுப்பறைக்குள் இனிமேலும் அனுமதிக்க முடியாது என பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது.
அப்படி பள்ளியால் நிராகரிக்கப்பட்ட எடிசனுக்கு அவரது அம்மா வீட்டிலேயே பாடம் சொல்லி கொடுக்க ஆரம்பித்தார். தன்னுடைய சிறுவயதில் இருந்தே துருதுருவென்று எதாவது செய்துகொண்டே இருக்கும் சிறுவனாக இருந்த தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாய் அளித்த பயிற்சியினால் பத்து வயதிற்குள் நிறைய புத்தங்களைப் படித்தார்.
அப்படி மூளை வளர்ச்சி குறைந்த பையனாக அறியப்பட்ட எடிசன் தான் பின்னாட்களில் உலகம் போற்றும் கண்டுபிடிப்புகளின் பேரரசன் என போற்றப்பட்டார். அவரின் கடின முயற்சியால் கடின உழைப்பால் தற்போது அனைவராலும் போற்றப்படுகிறார். எடிசன் தனது வாழ்நாளில் பல அறிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி நமது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
பன்னிரண்டு வயதில் பெற்றோருக்குச் சிரமம் கொடுக்க கூடாது என எண்ணிய எடிசன் புத்தகங்களுக்கும் ஆராய்ச்சி உபகரணங்களுக்கும் வேண்டிய பணத்தைச் சம்பாதிக்க ரயில் வண்டியில் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் ரயிலின் லக்கேஜ் வேனில் தனக்கென்று கொஞ்ச இடம் கேட்டு பெற்று பழைய அச்சு இயந்திரத்தை வைத்து பத்திரிகையைத் தொடங்கினான். உலகத்திலேயே மிகவும் குறைந்த வயதுடைய பத்திரிகை ஆசிரியா் தாமஸ் ஆல்வா எடிசன் தான். மேலும் ரயில் பெட்டியில் தனது ஆராய்ச்சிகளையும் தொடங்கினார்.
தம்முடைய செய்தித்தாளுக்கு அவரே ரிப்போர்ட்டராகவும், செய்திகளை அச்சிடுபவராகவும், விற்பவராகவும் செயல்பட்டார். ஓடும் ரயிலில் ஏறிய போது ஏற்பட்ட தீப்பிடித்ததில் அவருடைய ரயில் வியாபாரம் தடைப்பட்டது. ஸ்டேஷன் மாஸ்டரின் குழந்தையை ரயில் விபத்திலிருந்து எடிசன் காப்பாற்றியதற்காக அக்குழந்தையின் தந்தை எடிசனுக்கு தந்தி முறையை கற்பித்தார். பின்னர் தமக்குத் தேவையான தந்திக் கருவியை எடிசன் தாமே தயாரித்துக் கொண்டார்.
1887 வரை அமிலங்களை ஊற்றித்தான் விளக்கு எரித்துக் கொண்டிருந்தார்கள். அதனை மாற்றி எடிசன் வெப்பத்தை வெளிவிடுகிற மின் விளக்கைக் கண்டுபிடித்துப் பெரும் புகழ் பெற்றார். மின்சார விநியோக மையம் ஒன்றை நியூயார்க் நகரில் ஏற்படுத்தி நுகர்வோருக்கு மின்சாரத்தை விநியோகித்தார்.இதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
மின்விளக்கினை கண்டுபிடிக்க நீண்ட நேரம் நீடித்து எரிவதற்கு தகுந்த மின் இழையை எந்த பொருளில் உருவாக்குவது என்பதில் பெரிய சிக்கல் உண்டானது.
கிட்டத்தட்ட 5000 முறை வேறு வேறு பொருள்களால் ஆன மின் இழையை அவர் சோதனைக்கு உட்படுத்தினார். அப்போதும் அவர் ஓயவில்லை, இறுதியாகத்தான் டங்ஸ்டன் இழையை கண்டுபிடித்தார்.இப்படி தான் ஒரு விஷயத்தை கையில் எடுத்தால் அதை நிச்சயம் வெற்றியடையும் வரை ஓயாமல் முயற்சி செய்து கொண்டு இருப்பார் எடிசன்.
1871-ல் மேரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இரசாயனப் பாடம் பயின்ற மேரி எடிசனுக்குப் பெரிதும் உதவியாயிருந்தார். 1884-ல் அவருடைய மனைவி மேரி இறந்தார். இதையடுத்து எடிசன் இரண்டாவது முறையாக மில்லர் என்கிற பெண்ணை மணந்து கொண்டார். தம்முடைய ஒவ்வொரு மனைவியின் மூலமும் தலா மூன்று பிள்ளைகள் அவருக்கு உள்ளனர்.
தன்னுடைய 84ஆவது வயதில் 1931 அக்டோபர் 18ஆம் தேதி நியூ ஜெர்சி மாகாணத்தில் வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். “வாழ்க்கைய அழிக்ககூடிய எந்த கண்டுபிடிப்பையும் நான் செய்ய மாட்டேன் ஏனெனில் மக்களை மகிழ்விக்க வேண்டுமென்பதே எனது நோக்கம்” என்பதே தாமஸ் ஆல்வா எடிசனின் தாரக மந்திரமாக இருந்தது. அந்த உயரிய எண்ணத்தின் காரணமாகவே அளவிடமுடியாத பலன்களை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
எண்ணிலடங்கா கண்டுபிடிப்புகளை செய்த தாமஸ் ஆல்வா எடிசனின் பிறந்த நாளான இன்று அவரை நாம் நினைவுகூறுவோம்.