HBD Morarji Desai: ‘காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர்!’ மொரார்ஜி தேசாய் பிறந்தநாள் இன்று!
’சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத முதல் அரசின் பிரதமர் ஆனவர் என்ற பெருமை மொரார்ஜி தேசாய்க்கு உண்டு ஆனால் அது நீண்டகாலம் நிலைக்கவில்லை’
குஜராத்தின் பதேலியில் பிப்ரவரி 29, 1896 இல் பிறந்த மொரார்ஜி தேசாய், சிறுவயதிலிருந்தே சேவை உணர்வுடன் திகழ்ந்தார். குஜராத்தின் கோத்ராவில் துணை ஆட்சியராக இருந்த நிலையில், அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டத் தொடங்கினார். மகாத்மா காந்தி போன்ற தலைவர்களால் ஈர்க்கப்பட்டு இந்திய சுதந்திர இயக்கத்தில் மூழ்கினார்.
உப்பு சத்தியாகிரகம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களில் அவர் தீவிரமாக பங்கேற்ற சுதந்திரப் போராட்டத்தின் போது தேசாயின் அரசியல் பயணம் வேகம் பெற்றது. அகிம்சையின் மீதான அவரது அர்ப்பணிப்பும், காந்தியக் கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றுவதும் அவருக்கு அவரது சகாக்கள் மற்றும் மக்கள் மத்தியில் மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது.
பம்பாய் மாகாண முதல்வரும் சர்ச்சைகளூம்!
இந்திய தேசிய காங்கிரஸில் தேசாயின் எழுச்சி வேகமாக இருந்தது. 1952ஆம் ஆண்டு குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களை உள்ளடக்கி இருந்த பம்பாய் மாகாணத்தின் முதலமைச்சராக பணியாற்றினார்.
மொழிவாரி மாநிலக் கோரிக்கை வலுப்பெற்று வந்த காலகட்டம் அது, பம்பாய் மாகாணத்தை பிரித்து மொழி அடிப்படையில் பிரித்து மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை உருவாக்க வேண்டும் என போராட்டங்கள் நடந்தன.
அப்போது போராட்டம் நடத்திய சம்யுக்த மகாராஷ்டிர சமிதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த காவல்துறைக்கு தேசாய் உத்தரவிட்டார். இதனால் நடந்த கலவரத்தில், 105 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். இந்தப் பிரச்னை பெரிதாகி, மொழி அடிப்படையில் இரு தனி மாநிலங்களுக்கு மத்திய அரசு சம்மதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
நேரு அமைச்சரவையில் முக்கிய பதவி!
பின்னர் மத்திய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தார். பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் கீழ் அவர் நிதி அமைச்சராக இருந்த காலம் அவரது நிதிக் கொள்கைகள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
நேரு மறைவுக்கு பின்னர் பிரதமராகும் தகுதி உள்ள நபர்களில் மொரார்ஜி முக்கியமானவராக இருந்தார். ஆனால் அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் மொரார்ஜிக்கு பதில் லால்பகதூர் சாஸ்திரியை முன்னிலைப்படுத்தினார்.
பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மறைவுக்கு பின்னர் மீண்டும் பிரதமர் பதவிக்கு முயற்சி செய்தார். ஆனால் இந்திரா காந்தி பிரதமர் ஆனார். இந்திரா காந்தியின் அரசாங்கத்தின் கீழ் தேசாய் துணைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கருத்து வேறுபாடு காரணமாக நிதி அமைச்சர் பதவியில் இருந்து இந்திரா காந்தி மொரார்ஜி தேசாயை நீக்கினார். இறுதியில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ய வழிவகுத்தது, இது அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையை ஏற்படுத்தியது.
நெருக்கடி நிலை பிரகடனம்
1969 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது, தேசாய் கட்சியின் ஸ்தாபன காங்கிரஸ் அமைப்பில் சேர்ந்தார். 1976ஆம் ஆண்டு நெருக்கடி நிலை காலத்தில் ஸ்தாபன காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சேர்ந்து ஜனதா கட்சியை உருவாக்கின.
காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர்!
நாடு முழுவதும் வீசிய ஜனதா அலை காரணமாக 1977 தேர்தலில் ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. இதன் விளைவாக காங்கிரஸ் அல்லாத முதல் அரசின் பிரதமராக மொரார்ஜிதேசாய் பொறுப்பேற்றார்.
இருப்பினும், அவரது பதவிக்காலம் சவால்கள் இல்லாமல் இல்லை. பொருளாதாரப் பிரச்சினைகள், உட்கட்சிப் பூசல்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை இக்கட்டான சூழ்நிலைகள் அவரது பதவிக்காலத்தில் குறிப்பிடத்தக்க தடைகளை ஏற்படுத்தியது.
பிரதமர் பதவியில் இருந்து விலகல்
போதய உறுப்பினர்களின் ஆதரவை மொரார்ஜி பெற முடியாததால் 1979ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து விலகினார். 1980ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மூத்த அரசியல் தலைவராக ஜனதா கட்சிக்காக பரப்புரை செய்தார். அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற அவர் மும்பையில் குடியேறி வசித்து வந்தார்.
1990ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசின் மிக உயரிய விருதான நிஷான்-இ-பாகிஸ்தான் விருது மொரார்ஜி தேசாய்க்கு வழங்கப்பட்டது. 1991ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயர்ந்த விருதான பாரத் ரத்னா விருது மொரார்ஜி தேசாய்க்கு வழங்கப்பட்டது.
வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மொரார்ஜி தேசாய் தனது 99ஆவது வயதில் ஏப்ரல் 10, 1995 அன்று காலமானார்.