HBD Mylswamy Annadurai: கையருகே நிலா கனவை விதைத்த மூன் மேன்; யார் இந்த மயில்சாமி அண்ணாதுரை!
Chandrayaan 1: மயில்சாமி அண்ணாதுரை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனராக பணிபுரிந்தார். அப்போது 30க்கும் மேற்பட்ட செயற்கை கோள்களை உருவாக்கினார். தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் துணை தலைவராகவும் இருந்தார்.
நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தது சந்திராயன் 1 செயற்கைகோள். கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவை சுமந்து நிலவு நோக்கி சென்ற சந்திராயன் 1 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியதில் முக்கிய பங்கு வகித்த மயில்சாமி அண்ணாதுரை பிறந்த நாள் இன்று. இந்த நாளில் அவர் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
பிறப்பு
கோவை மாவட்டம் கோதவாடி கிராமத்தில் 1958ம் ஆண்டு ஜூலை மாதம் 2ந்தேதி பிறந்தவர் மயில்சாமி அண்ணாதுரை. அவரது தந்தை மயில்சாமி ஓர் ஆரம்ப பள்ளி ஆசிரியர். இவரது தாயார் பால சரஸ்வதி உடன் பிறந்தவர்கள் 4 பேர். அரசு பள்ளிகள் வராத அந்த காலத்தில் தன் முதல் கல்வியை மாட்டுக்கொட்டகையில் தொடங்கியதாக மயில்சாமி அண்ணாதுரை குறிப்பிட்டிருக்கிறார். பின்னர் இரண்டாம் வகுப்பு மாரியம்மன் கோயில் திண்ணை. 3ம் வகுப்பு படித்த போதுதான் தனி பள்ளிக்கட்டிடம் வந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் 1976ல் கோவை அரசு பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1982ல் கோவை பி.எஸ்.ஜி தொழில் நுட்ப கல்லூரியில் பட்ட மேற்படிப்பையும் முடித்துள்ளார்.
1975-76 காலகட்டங்களிலேயே ரேடியோ ஆன் செய்தால் தானாகவே ஆப் ஆகும் டைமரை கண்டறிந்தார்.
முக்கிய பணிகள்
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனராக பணிபுரிந்தார். அப்போது 30க்கும் மேற்பட்ட செயற்கை கோள்களை உருவாக்கினார். தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் துணை தலைவராகவும் இருந்தார்.
இவரே முதன் முதலில் இந்தியா நிலாவுக்கு அனுப்பிய சந்திராயன் 1 திட்ட இயக்குநராக பணியாற்றினார். இப்படி பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றினார்.
முக்கிய விருதுகள்
4 இந்திய விண்வெளி ஆய்வு விருதுகள், சந்திராயன் 1 திட்டத்திற்கான 3 சர்வதேச விருதுகள், அப்துல்கலாம் நினைவு அறிவியல் தொழில் நுட்ப சாதனை விருது 2023, என 50க்கும் மேற்பட்ட முக்கிய விருதுகளை மயில்சாமி அண்ணாதுரை பெற்றுள்ளார்.
இந்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்ம ஸ்ரீ விருதினை வழங்கி கவுரவித்தது.
புத்தகங்கள
தான் கற்றறிந்த விஷயங்களை அடுத்த தலைமுறைக்கும் கடத்தும் வகையில், கையருகே நிலா, சிறகை விரிக்கும் மங்கள்யான், வளரும் அறிவியல், அறிவியல் களஞ்சியம், விண்ணும் மண்ணும், இந்தியா -75 போர்முனை முதல் ஏர்முணை வரை போன்ற புத்தகங்களை எழுதி உள்ளார்.
மனம் வெதும்பிய மயில்சாமி அண்ணாதுரை
கோவையில் தனியார் பள்ளி கட்டணம் செலுத்த இயலாமல் தாய் தற்கொலை செய்து கொண்ட போது,
" மாட்டுக்கொட்டகை ஒரு வருடம்
கோயில் திண்ணை மறு வருடம்
கோணிப்பையே குடையாக
செருப்பே இல்லா நடைபயணம்
என்றே வளர்ந்தது என் கல்வி
முழுதாய்க் கற்றது கோவையில்தான்
எல்லாம் அரசு பள்ளியில்தான்
இருந்தும் நிலவில் நீர் கண்டேன்
அகிலம் பார்த்து மெச்சியது
எப்படி என்று பலர் கேட்டார்
தாய்மொழி கல்வியின் பலனென்று
வாய்மொழி கொண்டு நானுரைத்தேன்
நானிலமெல்லாம் அதைத்சொன்னேன்
அந்தோ இன்று எனதூரில்
அங்கோர் தாயும் மடிந்தாளே
அவளது மகனை பள்ளியிலே
ஆங்கில கல்வியில் கற்பிக்க
அவளது ஏழ்மை துரத்தியதால்
தீயில் கருகிச் செத்தாளாம்
சேதியை கேட்டு நான் நொந்தேன்.
ஏழ்மை என்பது பணத்தாலா?
அறியா மனதின் நிலையாலா?
அரசு பள்ளி பாழல்ல
அன்னை தமிழும் பாழல்ல
அறியா மனமே பாழென்பேன்
இதை அனைவரும் உணரும் வகையாக
விகடன் வழியாக வீடுகள் தோறும் சேர்த்திடுவோம்
இனியொரு தாய் வேகுமுன்னே
அரியா நிலையைத் தீயிட்டழிப்போம்" என்று விகடனில் ஆதங்கத்தை கொட்டியிருந்தார்.
மாட்டுக்கொட்டகை, கோயில் திண்ணை, அரசுப்பள்ளி என்று தன் கல்வியை துவங்கி அகில உலகையும் தன் பால் கவனம் ஈர்த்த மயில்சாமி அண்ணாதுரை இன்று தனது 65 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அரசுப்பள்ளியில் படிப்பது குறை இல்லை என்பதை இன்றும் தான் பேசும் மேடைகளில் எடுத்துரைக்கும் மயில்சாமி அண்ணாதுரை பிறந்த நாளில் அவர் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பெருமிதம் கொள்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்