தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு மே 15-ல் விசாரிக்கப்படும் - உச்ச நீதிமன்றம்!

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு மே 15-ல் விசாரிக்கப்படும் - உச்ச நீதிமன்றம்!

Karthikeyan S HT Tamil
May 06, 2024 12:08 PM IST

Senthil Balaji Case, Supreme Court: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை மே 15-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை மே 15-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்றக் காவலில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது பதில் மனுத்தாக்கல் செய்யும்படி அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அமலாக்கத்துறை சார்பில் கடந்த 29ஆம் தேதி பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏவாக உள்ள செந்தில் பாலாஜி அதிகாரமிக்க நபராக உள்ளதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பு சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று விசாரணையை தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம். அதன்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அன்றைய தினம் விசாரணை நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த முறை விசாரணையின் போது 320 நாட்களுக்கு மேலாக மனுதாரர் சிறையில் உள்ளார் என்றும் தனி நபர்களுக்குள் நடந்த கொடுக்கல் வாங்கல் விவகாரத்தை நிறுவனம் தொடர்புடைய மோசடியாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும்,  அமலாக்கத்துறை வேண்டும் என்றே வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதாக செந்தில் பாலாஜி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று வரும் மே 15-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்