singappenney: இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரி பாய் புலே
சாவித்ரிபாய், தனது கணவர் ஜோதிராவ் புலேவுடன் இணைந்து 1848 ஆம் ஆண்டில் புனேவில் பிடே வாடாவில் இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளிகளில் ஒன்றை நிறுவினார்.
அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்பதைப்போல அரசியல் எதற்கு என்று பேசப்பட்ட காலமும் இருந்தது. ஆனால் இந்திய வரலாற்றில் சுதந்திர போராட்டம் தொடங்கி தங்களுக்கு கிடைந்த வாய்ப்பை பயன்படுத்தி காலம் காலமாக அரசியல் உள்ளிட்ட பல துறைகளில் களமாடிய பெண்கள் ஏராளமானோர் உள்ளனர். அப்படியான பெண் ஆளுமைகளை திரும்பி பார்க்கும் ஒரு முயற்சியே இது. அந்த வகையில் இந்தியாவில் பெண்கல்விக்கு அடித்தளமிட்ட சாவித்திரி பாய் பூலேவும் மிக முக்கியமானவர்
சமூக சீர்திருத்தவாதியும், பெண்ணியவாதியுமான சாவித்ரிபாய் புலேவின் பிறந்த நாள் இன்று . 1831 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி மகாராஷ்டிராவில் பிறந்த புலே, இந்தியாவில் பெண்களின் கல்விக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடினார் என்பதே வரலாறு.
சாவித்ரிபாய், தனது கணவர் ஜோதிராவ் புலேவுடன் இணைந்து 1848 ஆம் ஆண்டில் புனேவில் பிடே வாடாவில் இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளிகளில் ஒன்றை நிறுவினார்.
அதுமட்டுமின்றி, பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படாத அந்த காலத்திலேயே ஆசிரியரான முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் சாவித்ரிபாய் புலே பெற்றுள்ளார். இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகவும் கருதப்படுகிறார். புலே தனது ஒன்பதாவது வயதில் ஜோதிபாவை மணந்தார். அப்போது அவர் படிப்பறிவில்லாதவராக இருந்தார், ஆனால் அவரது கணவர் அவரது வீட்டில் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொடுத்தார்.
தனது கல்வியை முடித்த பிறகு, அகமதாபாத்தில் மற்றும் புனேவில் இரண்டு ஆசிரியர் பயிற்சி திட்டங்களில் தன்னைச் சேர்த்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது பயிற்சியைத் தொடர்ந்து, அவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகவும், முதல் இந்திய தலைமை ஆசிரியையாகவும் ஆனார்.
சாவித்ரிபாய் புலே பின்னர் 1851 ஆம் ஆண்டின் இறுதியில் புனேவில் தனது கணவருடன் இணைந்து பெண்களுக்கான மூன்று பள்ளிகளை நிறுவினார்.
பின்னர் புலே சிசுக்கொலை தடுப்பு இல்லம் என்ற பெயரில் பெண்கள் காப்பகத்தை திறந்தார், அங்கு விதவைகள் தங்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கவும், அவர்கள் விரும்பினால் தத்தெடுப்பதற்கும் விட்டுவிடலாம்.
குழந்தைத் திருமணத்தை எதிர்த்த அவர், சதி மரபைக் கடுமையாக எதிர்த்தார். புலே விதவைகளுக்கான காப்பகத்தையும் அமைத்தார்.
சாவித்திரிபாய் விதவை மறுமணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார்.
சாவித்ரிபாய் புலே நிறுவிய பிடா வாடா பள்ளியில், ஜோதிபாவின் நண்பர் உஸ்மான் ஷேக்கின் சகோதரி பாத்திமா பேகம் ஷேக்கை வேலைக்கு அமர்த்தினார். நாட்டின் முதல் முஸ்லிம் பெண் ஆசிரியை என்ற பெருமையை பாத்திமா பெற்றுள்ளார்.
பழமைவாதக் கருத்துக்களுடன் உள்ளூர் சமூகத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட போதிலும், சாவித்திரிபாய் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த சிறுமிகளுக்கும் குழந்தைகளுக்கும் தொடர்ந்து கற்பித்தார்.
1897 இல் ஏற்பட்ட பிளேக்கு தொற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்பதற்காக, சாவித்திரிபாய் புலேயும் அவரது வளர்ப்பு மகனும் மருத்துவருமான யஷ்வந்தும் ஒரு மருத்துவமனையை அமைத்தனர். சாவித்திரிபாய் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அம்மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறச் செய்தார். இப்பணியில் அவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டு மார்ச் 10, 1897 இல் இயற்கை எய்தினார்.
அஞ்சல் தலை
2015 இல் புனே பல்கலைக்கழகத்தின் பெயர் சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது. மார்ச் 10, 1998 அன்று, இந்திய அஞ்சல் துறை சாவித்தரி பாய் புலேவின் நினைவாக ஓர் அஞ்சல் தலை வெளியிட்டது.
டாபிக்ஸ்