Safest country: பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இந்தியாவை விட பாகிஸ்தான் முன்னிலை
உலக அளவில் பாதுகாப்பு நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவை விட பாகிஸ்தான் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி ஐந்து இடங்களில் இடம்பிடித்துள்ளது.
உலக அளவில் பிரபலமான குளோபல் அனலிடிக்ஸ் என்ற நிறுவனம் முக்கியமான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகில் மிகவும் பாதுகாப்பான மற்றும் குறைந்த பாதுகாப்பு கொண்ட நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வு, சட்டம் மற்றும் ஒழுங்கு குறியீடு 2022 (Law and Order Index) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இந்தியா 60வது இடத்தில் உள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயமாக தொடர்ச்சியாக எல்லையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது, இந்தியாவுக்கு தொல்லை கொடுப்பது, பயங்கரவாத குழுக்களுக்கு பயிற்சி அளிப்பது, உலக நாடுகளிடம் கண்டனத்தை பெறுவது என அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் பாகிஸ்தான், இந்தியாவை விட 12 இடங்கள் முன்னணி பெற்று 48வது இடத்தில் உள்ளது.
உலகிலேயே அதிக பாதுகாப்பு நிறைந்த நாடாக 96 புள்ளிகளுடன் முதலிடத்தில் சிங்கப்பூர் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக தஜகிஸ்தான் (95), நார்வே (93), சுவிட்சர்லாந்து (92), இந்தோனேசியா (92) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இருக்கின்றன.
இதேபோல் பாதுகாப்பில் குறைபாடு உள்ள கடைசி 5 நாடுகள் பட்டியலில் சியர்ரா லியோன் (59), டிஆர் காங்கோ (58), வெனிசுலா (55), காமோன் (54), ஆப்கானிஸ்தான் (51) ஆகியவை உள்ளன.
கடைசி இடங்களில் உள்ள பட்டியலில் சியர்ரா லியோன், காங்கோ ஆகிய நாடுகள் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்தவையாக உள்ளது. பசியும், நோயும் வாட்டி வதைக்கும் ஆப்பிரிக்காவில் பயங்கரவாதம் தலைதூக்கி வருவதாக சொல்லப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக குளோபல் அனலிடிக்ஸ் நிறுவனத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு குறியீடு 2022ஐ பார்க்கையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தான் சிறப்பாக இருப்பதை சுட்டிக்காட்டி கிரிக்கெட்டில் இந்திய அணியை வீழ்த்த முடியாத பாகிஸ்தான் இந்த விஷயத்தில் வீழ்த்தியிருப்பதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.