IT Raid : ஒடிசா, ஜார்கண்டில் வருமான வரித்துறை சோதனை- ரூ.300 கோடி பறிமுதல்!
ரூ.300 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒடிசா மற்றும் ஜார்க்கண்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பல்வேறு மதுபான தயாரிப்பு நிறுவனங்களுடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடித்தி வந்தனர். இந்நிலையில் ரூ.300 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வரி ஏய்ப்பு தொடர்பாக எஸ்.ஷிவ் கங்கா அண்ட் கம்பெனி, பவுத் டிஸ்டிலரி பிரைவேட் லிமிடெட் மற்றும் ராணிசாத்தி நெல் பதப்படுத்தும் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல நிறுவனங்களில் புதன்கிழமை முதல் வருமான வரித்துறை வட்டாரங்கள் சோதனை நடத்தின. நிறுவன உரிமையாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் சாஹுவின் வீட்டிலும் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். 12 பேர் கொண்ட குழு தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். பி.டி.பி.எல் சோதனைக் குழுக்களுக்கு உதவ சுமார் நான்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்) வீரர்களும் நிறுத்தப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பணப் பைகள் மற்றும் சாக்குகளை ஒரு பெரிய லாரியில் ஏற்றிய வருமான வரித்துறையினர் பாரத ஸ்டேட் வங்கியின் போலங்கிர் கிளைக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் திதிலாகரில் உள்ள தீபக் சாஹு மற்றும் சஞ்சய் சாஹு ஆகிய இரண்டு மதுபான முதலாளிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வருமான வரித்துறை ரெய்டு குறித்து தகவல் கிடைத்ததும் அந்த 2 தொழிலதிபர்களும் ஊரை விட்டு தப்பியோடி தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுந்தர்கரில் உள்ள மதுபான வியாபாரி ஒருவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
ஒடிசாவின் பவுத், ரெய்திஹ், சம்பல்பூர் மற்றும் பலங்கிர் மாவட்டங்களில் அமைந்துள்ள பவுத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட் பி.டி.பி.எல் நிறுவனத்தின் வளாகங்கள் மற்றும் ஜார்க்கண்டின் ராஞ்சி மற்றும் லோஹர்தாகாவில் உள்ள நிறுவனத்தின் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனம் மாநிலம் முழுவதும் உள்ள விற்பனை நிலையங்கள் மூலம் பில், வவுச்சர்களை பராமரிக்காமல் போலி மதுபானங்களை விற்பனை செய்வதாகவும், அந்த நிறுவனத்தின் வழக்கமான கணக்கு புத்தகங்களில் கணிசமான அளவு பண விற்பனை கணக்கிடப்படவில்லை என்றும் கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பவுத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கூட்டாண்மை நிறுவனமான பல்தியோ சாஹு & குரூப் ஆஃப் கம்பெனிஸின் பலங்கிர் அலுவலகத்தில் நடந்த சோதனையின் போது ரூ .150 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது, மீதமுள்ளவை ராஞ்சியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. பௌத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட் மேற்கு ஒடிசாவில் மிகப்பெரிய நாட்டு மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை நிறுவனங்களில் ஒன்றாகும்.
ஒடிசாவைத் தலைமையிடமாகக் கொண்ட பவுத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட், ஃப்ளை ஆஷ் செங்கல்களை தயாரிக்கும் பால்டியோ சாஹு இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட், குவாலிட்டி பாட்டில் பிரைவேட் லிமிடெட் (ஐ.எம்.எஃப்.எல் பாட்டில்லிங்) மற்றும் கிஷோர் பிரசாத் பிஜய் பிரசாத் பிஜய் பிரசாத் பிவரேஜஸ் பிரைவேட் லிமிடெட் (ஐ.எம்.எஃப்.எல் பிராண்டுகளின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்) ஆகிய 4 நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வரும் நிலையில், சுந்தர்கர் தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ குசும் டெட்டே, பிஜு ஜனதா தளம் (பிஜு ஜனதா தளம்) தலைவர் ஜோகேஷ் சிங்குக்கு சோதனை நடந்த நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
"சுந்தர்கரில் மதுபான உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டபோது, அந்த ஆலை முன்னாள் பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ ஜோகேஷ் சிங்கின் தாயின் பெயரில் இருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அவர் அங்கிருந்து தொடர்ந்து பணத்தைப் பெற்றார், "என்று அவர் கூறினார்.
ஆனால், தனக்கு சொந்தமாக மதுபான உற்பத்தி ஆலை எதுவும் இல்லை என்று கூறி அனைத்து குற்றச்சாட்டுகளையும் சிங் நிராகரித்தார். "சாராய ஆலையின் உரிமையாளர்களுடன் எனக்கு குடும்ப உறவு மட்டுமே உள்ளது. அது என்னை அவரது தொழிலில் பங்குதாரராக்குமா? எம்.எல்.ஏ என் மீது இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது துரதிர்ஷ்டவசமானது" என்று சிங் கூறினார்.
டாபிக்ஸ்