PPF Account : பிபிஎஃப் கணக்குடன் ஆதார், பான் இணைப்பு - செப்டம்பர் 30 வரை அவகாசம்
Pan Aadhar PPF Linking : பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளோர் தங்கள் கணக்குடன் ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய அரசின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது ஓய்வு கால சேமிப்பு திட்டமாகும். ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பான ஓய்வு வாழ்க்கையை வழங்குவதே இதன் நோக்கமாகும். ஒவ்வொரு நிதியாண்டிலும், இந்த கணக்கில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை செலுத்தலாம். இதன் மூலம் வருமான வரி சலுகைகளுக்கும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம். ஓய்வு கால சேமிப்பு மட்டுமல்ல இதுபோன்ற சலுகைகளையும் அது வழங்குகிறது.
இந்தக்கணக்கை நீங்கள் எந்த தபால் அலுவலகம் அல்லது எந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் குறிப்பாக பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி, தனியார் வங்கிகளான ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகளிலும் துவங்கலாம்.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ரூ.1,000 அபராதத்துடன் கூடிய அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட் டுள்ளது. பல்வேறு முதலீட்டுத் திட்டங்களுக்கு ஆதார்-பான் இணைப்பு ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் (பிபிஎஃப்), பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ருத்தி சேமிப்புத் திட்டம், தபால் நிலைய வைப்புத்தொகைத் திட்டம் உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களில் இணைவதற்கு ஆதார் எண் முன் கட்டாயமாக்கப்படவில்லை.
இந்நிலையில், அத்திட்டங்களில் இணைவதற்கு ஆதார் எண்ணும், பான் எண்ணும் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதித் திட்டம் உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களில் ஏற்கனவே இணைந்துள்ளோர் தங்கள் ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆதார், பான் எண்கள் இணைக்கப்படாத கணக்குகள் முடக்கப்படும் என்றும் அரசு எச்சரித்தது.
ஆதார் எண் இல்லாமல் சிறுசேமிப்புக் கணக்கு தொடங்குபவர்கள், ஆதாரைப் பெறுவதற்காக விண்ணப்பித்த எண்ணைத் தற்காலிகமாக வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், சிறுசேமிப்புக் கணக்கு தொடங்கிய 6 மாதத்துக்குள் ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என்றும் இல்லையெனில், சம்பந்தப்பட்ட கணக்கு முடக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது.
பிபிஎஃப் கணக்குடன் ஆதார் இணைக்க எளிய வழிகள்
1. உங்கள் இன்டர்நெட் பேங்கிங்கில் உள் நுழையுங்கள்
2. இன்டர்நெட் பேங்கிங்கில் ஆதார் எண் பதிவு என்பதில் கிளிக் செய்யுங்கள்
3. 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்து, கன்பாஃர்ம் என்பதை கிளிக் செய்யுங்கள்
4. பிபிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க அதை தேர்ந்தெடுத்து கிளிக் ஃபினிஷ் கொடுங்கள்
5. ஆதார் இணைப்பு முடிவடைந்துவிட்டதா என்பதை தெரிந்துகொள்ள, முகப்பு பக்கத்தில் சென்று இன்குயரி என்ற ஆப்ஷனை தேர்நதெடுங்கள்
இப்படி எளிதான வழிகளில் ஆதாரையும், பிபிஎஃப் கணக்கையும் இணைத்து விடலாம்.
டாபிக்ஸ்