PM Modi: நிலவில் சந்திரயான் 3 லேண்டர் இறங்கிய இடத்துக்கு பெயர் வைத்த பிரதமர் மோடி!
பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு நேரில் சென்று பிரதமர் நரேந்திர மோடி விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
கிரீஸ் நாட்டில் இருந்து நேரடியாக பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு வந்த பிரதமர் மோடி, விஞ்ஞானிகளை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து லேண்டர் நிலவில் நேற்று தரையிறங்கியது. பின்னர், அதில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது. லேண்டரில் உள்ள அனைத்து ஆய்வு கருவிகளும் செயல்படத் தொடங்கி இருப்பதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய போது, பிரதமர் நரேந்திர மோடி தென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இருந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வெளி நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக நேரடியாக இன்று அதிகாலை 5 மணிக்கு பெங்களூரு வந்தடைந்தார். ஹெச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கிய பிரதமர் மோடியை கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து அங்கிருந்து பீனியாவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு திறந்த வாகனத்தில் பேரணியாக பிரதமர் மோடி பயணம் செய்தார். பின்னர் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிக்காக பாடுபட்ட விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோரை அவர் நேரில் சந்தித்து தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அப்போது பிரதமர் மோடிக்கு சந்திரயான்-3 மிஷன் குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் விளக்கம் அளித்தார். சந்திரயான்-3 மிஷன் திட்ட இயக்குனர் வீரசக்திவேலை நேரில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய இடம் 'சிவசக்தி' என அழைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்தியாவின் பெருமையான அசோக சக்கரம் தற்போது நிலவில் பதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்