Pawan Kalyan: ஆந்திர துணை முதல்வரானார் பவன் கல்யாண்; சந்திரபாபு நாயுடு மகனுக்கு ஐ.டி. துறை - முழு விபரம்!
Pawan Kalyan: சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக பவன் கல்யாணும், ஆந்திர உள்துறை அமைச்சராக அனிதா வாங்கலபுடியும் நியமிக்கப்பட்டுள்ளனர்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 25 அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ஆந்திர துணை முதல்வராக ஜன சேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவண் கல்யாண் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி, சுற்றுச்சூழல், வனத்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இலாகாக்களும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சந்திரபாபு நாயுடு மகனுக்கு ஐ.டி. துறை
சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் (41) மனிதவள மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு இலாகாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஸ்டான்போர்டு பல்கலைக்கழக எம்பிஏ பட்டதாரியும், உலக வங்கியின் முன்னாள் அதிகாரியுமான லோகேஷ், மங்களகிரி தொகுதியில் 91,413 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு
கொல்லு ரவீந்திராவுக்கு சுரங்கம் மற்றும் புவியியல் மற்றும் கலால் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடந்திலா மனோகருக்கு உணவு மற்றும் நுகர்பொருள் விநியோகம், நுகர்வோர் விவகாரத்துறையும், பொங்குரு நாராயணாவுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையும், அனிதா வங்கலப்புடிக்கு உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையும் வழங்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு இலாகாவை நாயுடு தக்க வைத்துக் கொள்வார்.