IndiGo Pilot: இண்டிகோ விமானியை சரமாரியாக தாக்கிய பயணி.. நடந்தது என்ன?
இண்டிகோ விமானியை பயணி ஒருவர் தாக்கிய சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட கடும் பனி மூட்டம் காரணமாக நேற்று 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணிநேரம் தாமதத்திற்கு பிறகே இயக்கப்பட்டன. சென்னை, பெங்களூரு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கிளம்பும் விமானங்களும் பனியால் திட்டமிட்ட பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.
இதனிடையே, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று (ஜன.14) மாலை கோவா செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் சில மணிநேரமாகக் கிளம்பாமல் இருந்தது. இதனால் பயணிகள் குழப்பம் அடைந்தனா். பின்னர், வானில் பனிமூட்டத்தால் விமானம் தாமதமாகவே புறப்படும் எனக் கூறப்பட்டது.
அப்போது, பின் இருக்கையில் உட்கார்ந்திருந்த பயணி ஒருவா், வேகமாக விமானியை நெருங்கி அவரை தாக்கியுள்ளாா். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டா். ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. உடனடியாக விமானியை தாக்கிய பயணி விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டார். விமானி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவனம் காவல்துறையில் புகாரளித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
விமானியை பயணி தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. பயணி மீது சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். விமானியை அடித்த பயணியின் பெயா் சாஹில் கட்டாரியா எனத் தெரியவந்துள்ளது. தற்போது, சாஹில் கட்டாரியா விமானியிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்கும் மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. புதிய வீடியோவில், பயணி சாஹில் கட்டாரியா, அதை பதிவு செய்யும் நபரிடம் "மன்னிக்கவும் சார்" என்று கூறுவதைக் காணலாம். அதற்கு பதிலளித்து, வீடியோ எடுத்த நபர் "மன்னிக்க வேண்டாம்" என்று கூறுவதைக் கேட்க முடிகிறது.
சாஹில் கட்டாரியா துணை விமானியிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், விமானத்திற்குள் தொந்தரவு ஏற்படுத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 323 (தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துவதற்கான தண்டனை), 341 (தவறான தடுப்புக்கான தண்டனை) மற்றும் 290 (பொது இடையூறுகளை ஏற்படுத்துவதற்கான தண்டனை) மற்றும் விமான விதிகளின் பிரிவு 22 ஆகியவற்றின் கீழ் பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தார்.
இதுவரை விமானத்தில் இடையூறு ஏற்படுத்தியதாக 166 பயணிகள் தடை செய்யப்பட்ட பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் நடத்தை விதிமுறைகள் மூன்று வகைப்படும். உடல் ரீதியான சைகைகள், வாய்மொழி துன்புறுத்தல் மற்றும் மதுபோதை ஆகியவை முதல் வகையின் கீழ் வருகின்றன. உடல் ரீதியாக தவறான நடத்தை (தள்ளுதல், உதைத்தல், அடித்தல், பிடித்தல் அல்லது பொருத்தமற்ற தொடுதல் அல்லது பாலியல் துன்புறுத்தல் போன்றவை) வகை 2 இன் கீழ் உள்ளது.
வகை 3 இல் உயிருக்கு ஆபத்தான நடத்தை (விமான இயக்க முறைமைகளுக்கு சேதம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், கொடூர தாக்குதல், விமான ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் விதிமுறை மீறல் போன்றவை) அடங்கும். தடை செய்யப்பட்ட பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குற்றத்தின் வகையைப் பொறுத்து மூன்று மாதங்கள் முதல் நிரந்தரமாக இந்தியாவுக்குள் / வெளியே / உள்ளே விமானங்களில் செல்ல தடை விதிக்க விமான நிறுவனங்களுக்கு அதிகாரம் உள்ளது.
டாபிக்ஸ்