காதலித்தது ரஷ்யாவில், திருமணம் ஜார்ஜியாவில்.. ஆனாலும் பிரிந்து வாழும் ஜோடி!
Valentine's Day: மனிதாபிமான அடிப்படையில் எஸ்டோனியாவுக்கு மகளுடன் செல்வதற்கு விசா பெறுவதற்கு வரவரா முயற்சித்து வருகிறார்.
உலகமே காதலர் தினத்தை இன்று தங்கள் பார்ட்னருடனும், காதலர்/காதலியுடனும் கொண்டாடி வரும் வேளையில், ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு ஜோடி, பிரிந்து வாழும் துயரத்தை எதிர்கொண்டுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த காதல் ஜோடி, ஜார்ஜியாவில் திருமணம் செய்து கொண்டது. ஆனாலும், ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் தனித்தனியாக பிரிந்து வாழ்கின்றனர்.
அதற்கு ரஷ்ய அரசும் ஒரு காரணமாகியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர், வரவரா ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரஷ்யாவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
ஆனால், அந்த சமயத்தில் ராணுவத்திற்கு ஆள்திரட்டும் பணியில் ரஷ்யா மும்முரமாக இறங்கியது. உக்ரைன் மீது போர் தொடுத்து வருவதால் கூடுதல் ஆண்களை ரஷ்ய ராணுவத்தில் சேர்க்க அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அதேசமயம் அலெக்ஸாண்டரை ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வருமாறும் அந்நாட்டு ராணுவம் அழைப்பு விடுத்தது. செய்வதறியாது திகைத்துப் போன அலெக்ஸாண்டர் அங்கிருந்து எஸ்டோனியா செல்ல முடிவு செய்தார். திட்டமிட்டபடி அந்நாட்டுக்குச் சென்ற அவர், அதன் பிறகு ரஷ்யா திரும்பவில்லை.
அலெக்ஸாண்டர் எஸ்டோனியாவில் பிறந்தவர் என்பதால் அங்கும் அவருக்கு குடியுரிமை உள்ளது. ஆனால், வரவரா ரஷ்யா குடிமகள். இதனால், அவருக்கு எஸ்டோனியா செல்வதற்கு விசா கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதையடுத்து, இருவரும் ஜார்ஜியாவுக்குச் சென்று திருமணம் செய்துகொண்டனர். வரவராவுக்கு முதல் திருமணம் மூலம் பிறந்த சாஷாவும் திருமண வைபவத்தில் பங்கேற்றார்.
பின்னர், இருவரும் தங்கள் நாட்டுக்கு திரும்பி விட்டனர். மனிதாபிமான அடிப்படையில் எஸ்டோனியாவுக்கு மகளுடன் செல்வதற்கு விசா பெறுவதற்கு வரவரா முயற்சித்து வருகிறார்.
எனினும், அதற்கும் நீண்ட காலம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
வரவரா ரஷ்யாவில் சினிமா தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அலெக்ஸாண்டர், பர்னிச்சர் தொழிலை எஸ்டோனியாவில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் செய்து கொண்ட பிறகு, இந்த காதலர் தினத்தில் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறது இந்த ஜோடி.
டாபிக்ஸ்