இந்தியாவில் தஞ்சமடைந்தாரா மகிந்த ராஜபட்சே? - விளக்கம் அளித்த தூதரகம்
கொழும்பு: இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபட்சே குடும்பத்துடன் இந்தியாவுக்கு தப்பிவிட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வேகமாக பரவியதை இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகம் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் போராடி வருகின்றனர். இதையடுத்து திடீர் திருப்பமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபட்சே திங்கட்கிழமை ராஜிநாமா செய்தார். இதனால் கொந்தளித்த மகிந்த ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வரலாறு காணாத கலவரம் வெடித்தது.
முன்னாள் பிரதமர் ராஜபட்சேவின் பாரம்பரிய வீட்டை திங்கட்கிழமை இரவு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். நேற்று காலை அவரது சகோதரர் பசில் ராஜபட்சே வீட்டையும் கொளுத்தினர். காவல்துறைக்கு சொந்தமான வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. கலவரத்தை கட்டுப்படுத்த சில இடங்களில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் பலர் காயமடைந்தனர். இதனால் தீவு தேசமான இலங்கை கலவர பூமியாக மாறியுள்ளது.
இதனையடுத்து அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபட்சேவும் அவரது குடும்பத்தினரும் பலத்த பாதுகாப்புடன் தனி ஹெலிகாப்டரில் திரிகோணமலை கடற்படை தளத்துக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. கடற்படை தளத்தில் இருந்து ராஜபட்சே மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. அதேநேரத்தில் ராஜபட்சே குடும்பத்துடன் இந்தியாவுக்கு தப்பிவிட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வேகமாக பரவியது. ஆனால் இதனை இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், "குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவுகிறது.
இதனை இந்திய தூதரகம் மறுக்கிறது. இந்த தகவல்கள் அனைத்தும் போலியானது. இதில் எந்த வித உண்மைகளும் இல்லை. இவ்வாறான செய்திகளை தூதரகம் கடுமையாக மறுக்கின்றது." எனத் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கைக்கு இந்திய படைகளை அனுப்ப உள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்தியையும் இந்திய தூதரகம் மறுத்துள்ளது.
தொடர்புடையை செய்திகள்