1,800 ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட்!
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது.
வாஷிங்டன்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 1,800 ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருப்பது தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் அதன் கட்டமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அந்நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 1,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து புதிதாக ஆட்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில் அதிகமான ஊழியர்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இருப்பார்கள் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சார்பில் கூறுகையில், " இன்று எங்கள் நிறுவனத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பணிநீக்கங்கள் நடைபெற்றன. எல்லா நிறுவனங்களை போலவே, நாங்களும் எங்கள் வணிக முன்னுரிமைகளை ஒரு வழக்கமான அடிப்படையில் மதிப்பீடு செய்து, அதற்கேற்ப கட்டமைப்பு மாற்றங்களைச் செய்கிறோம். எனவே எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 1,81,000 ஊழியர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களை பணிநீக்கம் செய்துள்ளோம்." என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் விதமாக கூகுள் நிறுவனமும் 2022ஆம் ஆண்டில் புதிய பணி நியமனங்களை செயல்படுத்துவதை குறைப்பாத சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.