Man eater tiger caught alive:மகாராஷ்டிராவில் 13 பேரை கொன்ற ஆட்கொல்லி புலி மீட்பு
மகாராஷ்டிர மாநில வனப்பகுதியில் 13 பேரைக் கொன்று தின்ற புலியை வனத் துறையினர் நேற்று உயிருடன் பிடித்தனர்.
நாக்பூர்: மகாராஷ்டிராவில், கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரையிலும், வாத்சா பகுதியில் ஆறு பேர், பந்தாரா மாவட்டத்தில் நான்கு பேர், சந்திரபூர் வனப்பகுதியில் மூன்று பேர் என மொத்தம் 13 பேரை ஒரு புலி கொன்றுள்ளது.
இதுபோன்று மனிதர்களை வேட்டையாடும் புலிகள் மனித ரத்தம், சதையின் ருசியை அறிந்தால் பின்னர் வேறு விலங்குகளை வேட்டையாடுவதில்லை. தொடர்ந்து அவை மனிதர்களைத் தான் தாக்கி சாப்பிடும். ஆட்கொல்லி புலிகளை உடனடியாகப் பிடிக்காவிட்டால் அவை மனிதர்களைத் தொடர்ந்து வேட்டையாடி கொன்று பசியைத் தீர்க்கும்.
ஆட்கொல்லிப் புலிகள் பிற விலங்குகளை சாப்பிடுவதில்லை என்பதால் வனப்பகுதிகள், அதையொட்டி மனிதர்கள் வாழும் பகுதிகளில் ஊடுருவி சமயம் பார்த்து வேட்டையாடும். மற்ற புலிகளைக் காட்டிலும் ஆட்கொல்லிப் புலிகள் புத்திசாலித்தனம் நிறைந்தவை.
மகாராஷ்டிராவில் உள்ள வனப் பகுதியில் நிறைய புலிகள் இருப்பதாலும், வனப்பகுதியில் பழங்குடியினர்கள் அதிகம் வசிப்பதாலும் புலிகளால் மனிதர்கள் வேட்டையாடப்படுவது அதிகரித்து வருகிறது. ஒரு சில புலிகள் ஆண்டுக்கணக்கில் சிக்காமல் மனிதர்களை கொன்று குவித்துள்ளன.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரை 13 பேரைக் கொன்ற இந்த ஆட்கொல்லிப் புலியைப் பிடிப்பதற்கு வனத்துறையினர் திட்டமிட்டனர்.
இதையடுத்து, நாக்பூர் முதன்மை வனப்பாதுகாவலர் தலைமையில், கடந்த 4ஆம் தேதியன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில் புலியை உடனடியாக பிடிப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டது. அதன்படி ஆட்கொல்லி புலியை பிடிப்பதற்கு வனப்பாதுகாவலர் உத்தரவிட்டார். இதையடுத்து புலி மீட்புப் படையினர், அதிரடிப் படையினர் உள்ளிட்ட பல குழுவினர் இணைந்து புலியை பிடிக்கும் பணியில் இறங்கினர்.
இந்நிலையில், வாத்சா வனப்பகுதியில் நேற்று அதிகாலை, இந்த புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, நாக்பூரில் உள்ள மீட்பு மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதன்மூலம் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இருப்பினும் மீண்டும் ஆட்கொல்லிப் புலிகள் வந்துவிடாமல் தடுக்க வனத்துறையினர் தீவிர ரோந்துப் பணியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.