Kerala Crime : தனியாக சந்திக்கணும்’ என அழைத்த பெண்.. ரூம் போட்ட சித்திக்.. ஹோட்டல் அதிபர் கொலையில் பகீர் தகவல்!
கேரளாவில் ஹோட்டல் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது குறித்து பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் திரூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்திக். 58 வயதான இவருக்கு ஷக்கீலா என்ற மனைவி மற்றும் 4 பிள்ளைகள் உள்ளனர். கோழிக்கோடு மாங்காவு பகுதியில் சிக் பக் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வந்த நிலையில் இவரை கடந்த 18 ஆம் தேதி முதல் காணவில்லை. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரது மகன் ஷகத் திரூர் காவல் நிலையத்தில் கடந்த 22 ஆம் தேதி புகார் அளித்தார்.
புகாரைத் தொடர்ந்து போலீசார் சித்திக்கின் செல்போன் டவர் லொக்கேஷனை ஆய்வு செய்தபோது, கோழிக்கோடு இரிஞ்ஞிப்பாலம் டீக்காஷா என்ற தனியார் ஹோட்டலுக்கு அவர் கடைசியாக சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் கடந்த 18ஆம் தேதி அவர் அந்த ஹோட்டலில் 2 ரூம்களை புக் செய்ததாகவும், அதன் பிறகு அவரை காணவில்லை என்பதும் தெரியவந்தது. இதனிடையே, கடந்த சில நாட்களாக சித்திக் ஏடிஎம் கார்டு மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகள் மூலம் பயன்படுத்திய வங்கிக் கணக்குகளில் இருந்து பெரும் தொகை எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே அந்த ஹோட்டல் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது 19-ம் தேதி பிற்பகல் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ட்ரோலி பேக்குகளை கொண்டு செல்வது தெரியவந்தது. அவர்கள் குறித்து விசாரித்ததில் அதில் ஒருவர் சித்திக்கின் ஹோட்டலில் வேலை செய்த ஷிபிலி (22) என்பதும், அவருடன் சென்றது தோழியான பர்ஹானா (18) எனவும் தெரியவந்தது. இதையடுத்து சென்னைக்கு தப்பிச் சென்ற போது, ரயில்வே போலீசாரின் உதவியுடன் ஷிபிலி மற்றும் பர்ஹானா ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு உதவிய ஆஷிக் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் மூவரும் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
ஷிபில் மற்றும் பர்ஹானா உள்ளிடோர் கூறியதன் அடிப்படையில் பாலக்காடு அட்டப்பாடியில் இருந்து இரண்டு பெரிய ட்ராலி பேக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பேக்குகளில் சித்திக்கின் உடல் பாகங்கள் இருந்தன. உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் ஷபிலி, பர்ஹானா ஆகியோர் சித்திக்கை கொலை செய்தது தெரியவந்துள்ளதாகவும் அவர்களுக்கு உதவிய ஆஷிக் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனையில் சித்திக் இறந்து 7 நாள்கள் ஆனதாகவும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், “சித்திக்கும், பர்ஹானாவின் தந்தையும் நண்பர்கள் ஆவர். தனது நண்பரின் வேண்டு கோளுக்கு இணங்க சித்திக் தனது ஓட்டலில் பர்ஹானாவை வேலைக்கு சேர்த்தார். இதற்கிடையில் வேறொரு ஓட்டலில் வேலை பார்த்து வந்த ஷிபிலுடன், பர்ஹானாவுக்கு பழக்கம் ஏற்பட் டது. இந்த பழக்கம் காதலாக மாறியது.
பின்னர் சித்திக்கிடம் பரிந்துரை செய்து, ஷிபிலுக்கு தான் வேலை பார்க்கும் ஓட்டலில் பர்ஹானா வேலை வாங்கி கொடுத்தார். இதற்கிடையே பர்ஹானா மீது சித்திக்கிற்கும் விருப்பம் இருந்தது. மேலும் அவர் பர்ஹானாவிற்கு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் பர்ஹானா மற்றும் ஷிபில் ஆகியோர் காதலிப்பது சித்திக்கிற்கு தெரியவந்தது. உடனே அவர் 2 பேரையும் வேலையை விட்டு நீக்கினார். மேலும் தனக்கு சித்திக் தொல்லை கொடுத்து வந்ததை ஷிபிலிடம், பர்ஹானா கூறினார்.
இதனால் மன பொருளாதார ரீதியாக 2 பேரும் விரக்திக்கு ஆளானார்கள். இதனால் சித்திக்கை கொலை செய்ய திட்டமிட்ட னர். மேலும் பர்ஹானாவின் தம்பி ஆஷிக்கும், அவர்களுடன் கூட்டு சேர்ந்தார்.அவர்களது திட்டப்படி சித்திக்கை தொடர்பு கொண்டு பேசிய பர்ஹானா உங்களை தனியாக சந்திக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார். உடனே அவர் அருகில் உள்ள மற்றொரு ஓட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்குகிறேன். அங்கு நீ வா என்று கூறினார்.
அதன்படி அந்த ஓட்டல் அறையில் தங்கியிருந்த சித்திக்கை பார்க்க தனது காதலன் ஷிபில், தம்பி ஆஷிக்குடன் பர்ஹானா சென்றார். அறைக்குள் சென்றதும் 3 பேரும் சேர்ந்து, சித்திக்கை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரை நிர்வாணமாக்கி செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சித்திக், அவர்களை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும், சுத்தியல் மூலம் அவரது தலையில் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9