Viral wedding: மெஸ்ஸி, எம்பாப்பே டி- ஷர்ட் அணிந்து திருமணம் செய்த தம்பதி!
கேரளாவைச் சேர்ந்த புதுமணத் தம்பதி அர்ஜென்டினா, பிரான்ஸ் அணி வீரர்களின் டி ஷர்ட் அணிந்து திருமணம் செய்துகொண்டனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தாரில் முடிவடைந்தது. லுசெய்ல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் உலக ரேங்கில் 3-வது இடம் வகிக்கும் அர்ஜென்டினா, உலக ரேங்கில் 4-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த இறுதி ஆட்டம் பார்வையாளர்களுக்கு ஒவ்வொரு நொடியும் உற்சாகத்தை கொடுத்தது.
சுமார் மூன்று மணிநேரம் நீடித்த பரபரப்பான ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தன் வசமாக்கியது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தாண்டு மக்கள் உலக கோப்பை போட்டியை கண்டு ரசித்தனர். கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் பிரமாண்ட திரையில் உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்த்து உற்சாகம் அடைந்தனர். தங்களுக்கு விருப்பமான அணி வீரர்களின் ஜெர்சியை அணிந்தும் ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கேரளாவை பொறுத்தவரை அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிக்கும் அதன் நட்சத்திர வீரர்களுக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அர்ஜென்டினா - பிரான்ஸ் கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்றலும், அர்ஜென்டினா வெற்றியை கேரள கால்பந்து ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். அதிலும் சில சுவாரஸ்யமான காட்சிகளும் அரங்கேறி உள்ளன.
அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஜெர்சி அணிந்து திருமணம் செய்துகொண்ட கேரள ஜோடியின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொச்சியைச் சேர்ந்த சச்சின் - அதிரா ஜோடிதான் அர்ஜென்டினா, பிரான்ஸ் வீரர்களின் ஜெர்சியை அணிந்துகொண்டு திருமணம் செய்து கொண்டனர்.
மணமகன் சச்சின், அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சியின் தீவிர ரசிகர் ஆவர். மணமகள் அதிரா பிரான்ஸ் வீரர் எம்பாப்பவேயின் அதிதீவிர ரசிகை. இதனால் இருவரும் திருமண ஆடைகளின் மேல் கால்பந்து வீரர்களின் ஜெர்சியை அணிந்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமண தேதி டிசம்பர் 18 என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடந்ததால் மணமக்கள் மெஸ்சி, எம்பாப்வே டி ஷர்டுடன் திருமண கோலத்தில் இருந்தனர். இந்தப் புகைப்படத்தை பலரும் இணையத்தில் பகிர்ந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டாபிக்ஸ்