Israel-Hamas war: இஸ்ரேல் ஹமாஸ் இடையே இன்று முதல் 4 நாட்கள் போர் நிறுத்தம்: பணயக்கைதிகள் விடுவிப்பு; முக்கிய அப்டேட்கள்!
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: நான்கு நாள் போர்நிறுத்தத்திற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதில் பொதுமக்கள் பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பிற்பகலில் விடுவிக்கப்படுவார்கள்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசா பகுதியில் 49வது நாளாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) தொடங்குகிறது. நான்கு நாள் போர்நிறுத்தத்திற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். அதில் பொதுமக்கள் பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பிற்பகலில் விடுவிக்கப்படுவார்கள்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல்கள், கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி காசா பகுதியில் இருந்து 2,500 ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர். அப்போதிருந்து, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) காசா மீது தாக்குதல் நடத்தி ஹமாஸை அப்பகுதியிலிருந்து அழித்தொழிக்க ஆரம்பித்தன.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாள் 49: மோதல் பற்றிய சில தரவுகள்:
- போர் நிறுத்த காலத்தில் காசாவிற்கு தினமும் 130,000 லிட்டர் டீசல் மற்றும் நான்கு டிரக்குகள் எரிவாயு வழங்கப்படும் என்று எகிப்து தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமியக் குழுவான ஹமாஸ் வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு (IST) தொடங்கி நான்கு நாள்கள் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளும்.
- போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், 150 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் கூறியதற்கு ஈடாக, 50 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் முதலில் விடுவிக்கப்படுவார்கள். மேலும் விடுவிக்கப்படும் ஒவ்வொரு 10 பணயக்கைதிகளுக்கும் கூடுதல் ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்று இஸ்ரேல் கூறியது.
- நன்றி தெரிவிக்கும் விடுமுறைக்காக மாசசூசெட்ஸ் தீவான நாண்டுக்கெட்டில் விடுமுறையில் இருந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன், முதலில் விடுவிக்கப்பட்டவர்களில் 3 வயது அமெரிக்கப் பெண் குழந்தையும் இருப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
- போர்நிறுத்தத்திற்கு முன்னதாக, காசா நகருக்கு வடக்கே ஜபாலியா அகதிகள் முகாமைச் சுற்றி இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் 300க்கும் மேற்பட்ட இலக்குகள் மற்றும் துருப்புக்கள் கடும் சண்டையில் ஈடுபட்டதுடன், இயல்பை விட அதிகமான தீவிரத்தில் சண்டை தொடர்ந்தது.
- ஹமாஸின் கான் யூனிஸ் கடற்படைத் தளபதி அமர் அபு ஜல்லாவை இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) கொன்றது. விமானத்தாக்குதலில் அபு ஜல்லா கொல்லப்பட்டார்.
- காசாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் தலைவரை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தடுத்து வைத்துள்ளது. "ஷிஃபா மருத்துவமனை, ஹமாஸ் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையமாக செயல்பட்டதற்கான ஆதாரங்களைத் தொடர்ந்து மருத்துவமனை இயக்குநர் விசாரணை வளையத்தில் இருக்கிறார் என்று இஸ்ரேலிய ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து மேலும் 190 காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்கள், அவர்களது உறவுகள் மற்றும் மருத்துவ ஊழியர்களை அல்-ஷிஃபாவிலிருந்து தெற்கு காசாவில் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றியது.
- காசாவில் ஹமாஸ் நடத்தும் அரசாங்கத்தில் இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 15,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
- காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டனர்; 93 பேர் காயமடைந்தனர் என்று பாலஸ்தீனிய மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். காசா பகுதியில் உள்ள மிகப் பெரிய அகதிகள் முகாமான ஜபாலியாவில் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்திருந்த ஐ.நா.வால் நடத்தப்படும் பள்ளி மீது தாக்குதல் நடந்தது என்று முகாமில் உள்ள மருத்துவமனையின் மருத்துவர் கூறினார்.
- ஜெர்மனியில் தடைசெய்யப்பட்ட ஹமாஸ் மற்றும் மற்றொரு பாலஸ்தீனிய அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் ஜெர்மன் பொலீசார் சோதனை நடத்தினர். தலைநகர் பெர்லினில் 13 இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், சுமார் 500 பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கியதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்
டாபிக்ஸ்