Dr.Muthulakshmi Reddy: இந்திய நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு தினம்
தனி ஒரு மாணவியாக தமிழகத்தின் மருத்துவ கல்லூரியில் அடியெடுத்து வைத்தவர்தான் முத்து லெட்சுமி ரெட்டி.
பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறிய இந்த நாளில்தான் மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இன்று நாடாளுமன்றம் தொடங்கி நாடு முழுவதும் இதுதான் பேசு பொருளாக உள்ளது. அதிலும் பாதிக்கப்பட்ட பெண்களில் ராணுவ வீரரின் மனைவியும் ஒருவர் என்பது நாம் வெட்கி தலை குனியும் ஒரு விஷயம். இது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் ஓரளவு கல்வி பொருளாதாரத்தில் முன்னேறிய இந்த நாளிலேயே இத்தனை கொடூரம் நம் கண் முன் அரங்கேறுகிறது என்றால் கல்வி வாசமே இல்லாத காலத்தில் பெண்கள் எத்தனை சவால்களை எதிர்கொண்டிருப்பார்கள் என்று எண்ணிப்பார்த்தாலே நடுக்கமுற வைக்கிறது. அல்லவா அதிலும் அத்தனை ஆண்களுக்கு மத்தியில் ஒரே ஒரு பெண் மட்டும் மருத்துவக் கல்லூரியில் பயின்ற நிலையில் எத்தனை சவால்கள் எழுந்திருக்கும். அப்படி தனி ஒரு மாணவியாக தமிழகத்தின் மருத்துவ கல்லூரியில் அடியெடுத்து வைத்தவர்தான் முத்து லெட்சுமி ரெட்டி.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், தேவ தாசி முறை ஒழிப்பின் முக்கிய பங்காற்றியவருமான டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டியின் நினைவு தினம் இன்று. இந்த நாளில் அவர் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
முத்துலட்சுமி ரெட்டி, அப்போதைய புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886ம் ஆண்டு ஜீலை 30ம் தேதி பிறந்தார். இவரது தந்தை நாராயணசாமி பிராமணர். தாய் சந்திரம்மாள் இசைவேளாளர். அந்த காலத்திலேயே சமூகத்தின் கடும் எதிர்ப்பை கடந்து கலப்பு திருமணம் செய்துகொண்டவர்கள்.
தந்தையின் ஊக்குவிப்பால் அவரது ஆதரவுடன் சில ஆசிரியர் வீட்டிற்கே வந்து முத்துலட்சுமி ரெட்டிக்கு கல்வி கற்பித்தனர். வீட்டிலிருந்து படித்தே மெட்ரிக்குலேசன் தேர்வில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். பெண் என்பதால் அவருக்கு மன்னர் கல்லூரியில் சேர்வதற்கு இடம் வழங்கப்படவில்லை. அதுமட்டும் அல்லாமல் அவரை கல்லூரியில் சேர்வதற்கு பழமைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்வியில் அவருக்கு இருந்த ஆர்வத்தை அறிந்த புதுக்கோட்டை மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ராஜா கல்வி உதவித்தொகையுடன் உயர்கல்வி படிக்க இடம் கொடுத்தார்.
இதையடுத்து அன்றைய நாளில் சென்னை மருத்துவக்கல்லூரியில் அறுவைசிகிச்சை துறையில் படித்த முதல் மாணவியாகவும், ஒரே மாணவியாகவும் அவர் இருந்தார். அங்கு அறுவைசிகிச்சை பிரிவில் முதலாவது மாணவியாக தேர்ச்சிபெற்று தங்கப்பதக்கமும் பெற்றார். இதைதொடர்ந்து தொடர்ச்சியாக பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் போராடியவர். தனது சமூக மற்றும் மருத்துவ சேவைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையுடன் டாக்டர். சுந்தரரெட்டி என்பவரை 1914ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
மருத்துவம் மட்டும் போதாது என்று நினைத்த முத்துலட்சுமி ரெட்டி, ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேற வேண்டும், பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்க்கருதி அன்னிபெசன்ட் அம்மையாரின் வழிகாட்டுதலின் கீழ் பெண்களுக்கான இயக்கங்களில் பங்கேற்றார். இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் பெண் தலைவர், சென்னை மாநகராட்சியின் முதல் பெண் துணைமேயர், சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண்மணி என பல்வேறு அயராது உழைத்தார். இதற்கிடையில் முத்துலட்சுமி ரெட்டி, 1925ம் ஆண்டு சட்டசபை துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது குழந்தைகள் திருமண தடுப்புச்சட்டம், கோவில்களில் தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம், பாலியல் தொழில் தடுப்பு சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்கும் சட்டம், பெண்களுக்கு சொத்துரிமைச்சட்டம் உள்ளிட்டவற்றை உருவாக்குவதில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முக்கிய பங்கு வகித்தார்.
பெண்களின் திருமண வயதை 14 ஆக உயர்த்தக்கோரும் மசோதா குறித்து சட்டமன்ற கவுன்சிலில் விவாதம் நடந்தபோது, குழந்தை திருமணத்தால், குழந்தை பருவ மனைவி, குழந்தை பருவ தாய், குழந்தை பருவ கைம்பெண் என துயரங்கள் பெண்கள் வாழ்வில் தொடர்கதையாக உள்ளது என்று பேசினார். குழந்தை திருமண நடைமுறையை ஒழிக்க பட்டதாரிகள் கூட எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை இந்து கோவில்களுக்கு அர்ப்பணிக்கக் கூடிய தேவதாசி நடைமுறையை ஒழிக்கும் சட்டத்தை நிறைவேற்றுவதில் இவர் முன்னோடியாக திகழ்ந்தார். கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டத்திற்கு பின்னர் 1947ல் தான் அது சட்டமாக்கப்பட்டது.
தேவதாசிகளைப் பாதுகாப்பதற்காக அடையாறில் தனது இல்லத்தில் 1931ம் ஆண்டு அவ்வை இல்லத்தை தொடங்கி அவர்களை பாதுகாத்தார். தங்கை புற்றுநோயால் மரணமடைந்ததை தொடர்ந்து, 1954ம் ஆண்டு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை துவங்கினார். நாடு முழுவதிலும் இருந்து வரும் புற்றுநோயாளிகளுக்கு இங்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
இப்படி இந்த சமூகத்தில் பெண்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய 1956ம் ஆண்டு அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. 1947ம் ஆண்டு செங்கோட்டையில் முதலாவது சுதந்திர கொடியேற்றம் நடைபெற்றபோது அதில் சேர்ப்பதற்காக இவரது பெயரும் தேர்வு செய்யப்பட்டது. அவரது பிறந்த நாள் நூற்றாண்டில் தமிழக அரசு தபால் தலையை வெளியிட்டது. தனது 81வது வயதில் 1968ம் ஆண்டு அவர் மறைந்தார்.
இப்படி தன் வாழ்நாள் முழுவதும் பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டியின் நினைவு நாளான இன்று அவர் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதில் இந்தஸ்தான் டைம்ஸ் தமிழ் பெருமிதம் கொள்கிறது.
டாபிக்ஸ்