Homeopathy : இயற்கையிடம் இருந்து இனிப்பு மருந்துகள்… உலக ஹோமியோபதி தினம் இன்று
WorlD Homeopathy Day 2023 : உலக ஹோமியோபதி மருத்துவ தினமான இன்று அம்மருத்துவத்தின் பயன்கள் குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.
அந்தக்காலத்தில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை வைத்தே உடல் உபாதைகளுக்குத் தேவையான மருந்துகளையும் உருவாக்கினார்கள். இன்றும் சிலர் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி உள்ளிட்ட இன்னபிற இயற்கை மருத்துவ முறையை பின்பற்றுகிறார்கள். இயற்கை மருத்துவ முறையில் ஒன்றான ஹோமியோபதி மருத்துவ தினம் இன்று. இந்த மருத்துவமுறை 1700களின் பிற்பகுதியில் கண்பிடிக்கப்பட்டது. இதை ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவர் கிறிஸ்டியன் ஃபிரடெரிக் சாமுவேல் ஹனிமன் என்பவர் கண்டுபிடித்தார். அவரது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அவர் பிறந்த தினமான இன்று உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது.
உலக ஹோமியோபதி தினத்தின் இந்தாண்டின் கருப்பொருள் ‘ஒரு ஆரோக்கியம் ஒரு குடும்பம்’ என்பதாகும். இது உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தை உலகம் முழுவதுமே குடும்பமாக பாவித்து ஹோமியோபதி சிகிச்சையை வழங்குவது இதன் அர்த்தமாகும். ஒவ்வொரு வீட்டிலும் ஹோமியோபதி மருத்துவத்தை முக்கியமான சிகிச்சையாக மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வாமை, முகப்பரு, ஆட்டிசம், ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்னைகளை நன்றாகவே குணப்படுத்துகிறது. சில நாள்பட்ட நோய்களுக்கு இம்மருத்துவமுறை நிரந்தர தீர்வு கொடுக்கிறது.
ஹோமியோபதி மருந்துகள் மினரல்கள் மற்றும் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் வேதிப்பொருட்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே ஹோமியோபதி மருந்துகள் பெரும்பாலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்று அம்மருத்துவத்தை பரிந்துரைக்கும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். குழந்தைகள், வயோதிகர்கள் மற்றும் கர்ப்பிணிகள் என அனைவருக்கும் பாதுகாப்பான மருந்தாகும். பயம் மற்றும் பதற்றம் போக்கும் மருந்தாகவும் உள்ளது.
நோய் அறிகுறிகளை பின்பற்றி செய்யப்படும் மருத்துவம் ஆகும். அதற்கு இயற்கையில் இருந்து பொருட்கள் பெறப்படுகின்றன. எடுத்துக்காட்டாக வெங்காயம் நறுக்கும்போது உங்களுக்கு கண்ணில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறது என்றால் அதைப்பயன்படுத்தி ஒவ்வாமைக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் ஆல்கஹால் அல்லது தண்ணீரை ஊற்றி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கிறார்கள்.
குறைவான அளவு மருந்துகள்தான் அதிகளவு மருந்துகளைவிட நன்றாக வேலை செய்வதாக ஹோமியோபதி மருத்துவர்கள் நம்புகிறார்கள். இம்மருந்துகள் சிறிய அளவில் இனிப்பு மாத்திரைகளாக, திரவமாக, ஜெல், க்ரீம் மற்றும் மாத்திரைகளாக வருகின்றன. அந்த இனிப்பு மாத்திரைகளை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த மருந்துகள் அந்த குட்டி மாத்திரைகள் நம்மை குணப்படுத்துகிறது என்று நாம் நம்புவதாலே அவை குணமடையச்செய்கின்றன என்ற ஒரு கருத்தும் இம்மருத்துவமுறை குணப்படுத்தும் முறையாகவும் கருதப்படுகிறது.
டாக்டர் கிறிஸ்டியன் ஃபிரெடரிக் சாமுவேல் ஹனிமன் ஒரு ஜெர்மனி மருத்துவர். இவர் சிறந்த அறிஞர், மொழியிலாளர் மற்றும் புகழ்பெற்ற விஞ்ஞானியும் ஆவார். இவர் 1755ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். எர்லாங்கன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார். அவருக்கு அப்போதைய காலத்தின் மருத்துவ முறைகள் பிடிக்கவில்லை. அதில் ஏமாற்றமடைந்த அவர் மாற்று வேண்டும் என நினைத்தார். அது பெரும்பாலும்தீங்கு விளைவிக்கக்கூடியதாகவும், பயனற்றதாகவும் இருந்தது என்று அவர் நம்பினார்.
1796ம் ஆண்டில் மலேரியாவுக்கு சிகிச்சையளிக்கப்பயன்படுத்தப்படும் குயினின் என்ற பொருளைக்கொண்ட சின்னோனா பட்டையின் ஒரு சிறிய அளவை எடுத்துக்கொண்டு ஒரு பரிசோதனையைச் செய்தார். மலேரியா போன்ற அறிகுறிகளை அவர் உருவாக்கியிருப்பதை கண்டறிந்தார். இதிலிருந்து ஆரோக்கியமானவர்களுக்கு அநிகுறிகளை ஏற்படுத்தும் பொருட்களை நோயுற்றவர்களுக்கு அதே அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப்பயன்படுத்தலாம் என அவர் முடிவு செய்தார்.
டாக்டர். ஹானிமன் ஹோமியோபதிக்கான கொள்கைகளை உருவாக்க துவங்கினார். மேலும் 1810ம் ஆண்டில் ஆர்கனால் ஆஃப் மெடிசின் என்ற தனது அடிப்படையை வெளியிட்டார். ஹோமியோபதி விரைவில் ஐரோப்பாவில் பிரபலமடைந்தது. உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இன்று, இது பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது மற்றும் மாற்று மருத்துவத்தின் ஒரு வடிவமாக உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் இந்த மருத்துவமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அரசு மக்களுக்கு தாங்கள் விரும்பும் மருத்துவ முறைகளை பின்பற்றும் தேர்வை வழங்க வேண்டும் என்று மாற்று மருத்துவங்களை பின்பற்றும் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த உலக ஹோமியோபதி தினத்தில் அது குறித்து அறிந்துகொள்வதுடன் மக்கள் பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வை பெறுவதுடன், தங்களுக்கு தேவையான மருத்துவ முறையை பின்பற்றி தங்களின் உடல் நலனை மேம்படுத்தி ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்வு வாழ வேண்டும்.
டாபிக்ஸ்