Himachal election 2022: இமாச்சலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது!
Himachal Pradesh Assembly Elections 2022: 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடந்த தேர்தலில், 75.6 சதவிகித வாக்குகள் பதிவானது.
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளிலேயே இதுதான் மிக மிக அதிகம் ஆகும். இமாச்சலில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 35 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவு படி இமாச்சலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 34-39 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் 28-23 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 0-1 இடங்களிலும், மற்ற கட்சிகள் 1 முதல் 4 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
டைம்ஸ் நவ் -ETG
டைம்ஸ் நவ் -ETG கருத்து கணிப்பு முடிவுகள் படி, இமாச்சல் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பாஜக 34-42 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு 24-32 இடங்கள் கிடைக்கும் என்றும் டைம்ஸ் நவ் -ETG கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆம் ஆத்மி ஒரு இடங்களில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா டுடே - Axis My India
இந்தியா டுடே - Axis My India வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகளில் இமாச்சலில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக 24 - 34, காங்கிரஸ் 30 - 40, ஆம் ஆத்மி 0, மற்றவை 4- 8 தொகுதியை கைப்பற்றும் என்றும் இந்தியா டுடே - Axis My India கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.