Himachal pradesh election 2022: வாக்கு எண்ணிக்கை! பாதுகாப்பு பணிகள் தீவிரம்
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 8ஆம் தேதி இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகளை மேற்கொள்வதற்கு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக 380 அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ள நிலையில், மூன்று அடுக்க பாதுகாப்பு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எவ்வித இடையூறும் இன்றி மின் விநியோகம் வழங்குமாறு மின்சாரத்துறையிடம் கேட்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 12ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவில் 75.6 சதவித வாக்குகள் பதிவானது. இதுவரை சட்டப்பேரவை தேர்தலுக்காக பதிவான வாக்குகளில் இதுதான் அதிகம் என கூறப்படுகிறது. இந்த தேர்தலில் 35 இடங்களில் வெற்றி பெறும் கட்சி இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும்.
2017ஆம் ஆண்டு இமாச்சல் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் தர்மாபூர், ஜெய்சிங்பூர், ஷிம்லா, பாய்ஜ்நாத், போரஞ், சோலன் உள்பட 11 தொகுதிகளில் வாக்குப்பதிவு மிகவும் குறைவாக நடைபெற்றது. இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகரிப்பதற்கான முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்ட நிலையில், 9 தொகுதிகளில் இம்முறை வாக்குப்பதிவானது அதிகரித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிகபட்சமாக தூண் தொகுதியில் 85.25 சதவீதம் வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக ஷிம்லா தொகுதியில் 62.53 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
இதேபோல் குஜராத் மாநிலத்துக்கும் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது. இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மாலையில் இரு மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன.
இதற்கிடையே பாஜகஉயர்மட்ட தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்றும், நாளையும் தில்லியில் நடைபெறுகிறது.பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
அடுத்தாண்டு 9 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டபேரவை தேர்தல்கள், 2024இல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல்கள் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் களநிலவரங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அமைச்சர்கள், எம்பிக்கள் அடங்கிய குழுவினர் தங்களது ஆய்வறிக்கை இந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்புடையை செய்திகள்