Himachal Election 2022: இன்று மாலை வெளியாகும் கருத்து கணிப்புகள்
குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணிக்கு முடிவடைய உள்ள நிலையில், 6 மணியில் இருந்து குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில தேர்தலின் எக்சிட் போல் முடிவுகள் வெளியாக உள்ளன.
குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
இதேபோல், இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடந்த தேர்தலில், 75.6 சதவிகித வாக்குகள் பதிவானது.
இமாச்சலப் பிரதேசத்தை பொறுத்தவரை, சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளிலேயே இதுதான் மிக மிக அதிகம். இமாச்சலில் பெரும்பான்மை பெற பெற 35 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8 ஆம் தேதி எண்ணப்பட இருக்கிறது. ஆளும் கட்சி எதிர்க்கட்சி ஆகுமா? இல்லை எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக மாறுமா? என்ற உறுதியான முடிவுகள் அன்றைய தினம் தெரிய வரும்.
இந்த நிலையில் இரு மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று மாலை வெளியாக உள்ளன. பல்வேறு ஊடகங்கள், கருத்து கணிப்பு நிறுவனங்கள் மேற்கொண்ட கணிப்பு முடிவுகள் தேர்தல் முடிந்த பின் இன்று மாலை 6 மணியில் இருந்து வெளியாக உள்ளன.