White Paper: மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்..முக்கிய அம்சங்கள் என்னென்ன? - முழு விபரம் இதோ..!
மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து இங்கு அறிவோம்.
முந்தைய 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் பொருளாதார நிலை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அதன்படி, மக்களவையில் இன்று (பிப்.08) வெள்ளை அறிக்கையை அவர் தாக்கல் செய்தார்.
நிதியமைச்சர் தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு குறித்து விளக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது, பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது. பொது நிதி மோசமான நிலையில் இருந்தது. வாராக்கடன் அதிகமாக இருந்ததால் வங்கிகள் அதிக பலவீனமாக இருந்தன. பல்வேறு துறைகள் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருந்தன. பொருளாதார முறைகேடு மற்றும் பரவலாக ஊழல் நிறைந்திருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு நிகழ்ந்த உலக பொருளாதார மந்த நிலையின் போது இந்தியா மோசமாக பாதிக்கப்படவில்லை எனவும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் கருவூலத்திற்கும் நிதி மற்றும் வருவாய் பற்றாக்குறைக்கும் பெரும் வருவாய் இழப்புகளை கொண்டு வரும் ஏராளமான மோசடிகள் இருந்தன. ஆனால், நரேந்திர மோடி அரசின் கடந்த 10 ஆண்டு கால நீடித்த முயற்சிகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு 'தேசம்-முதலில்' என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், வெறும் அரசியல் புள்ளிகளைப் பெறுவதில் அல்ல என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வளர்ச்சிப் பாதையில் பொருளாதாரம் உள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு விட்டுச் சென்ற சவால்களை தற்போதைய மத்திய அரசு வெற்றிகரமாக முறியடித்துள்ளது. 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காங்கிரஸ் சார்பில் கருப்பு அறிக்கையை அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டார். அதில், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை மோடி அரசு சீர்குலைத்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்