மகிழ்ச்சியில் குடும்பத் தலைவிகள்! ரூ.1000 உதவித் தொகை.. புதுச்சேரியில் அமல்!
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே நேற்று மாலை அந்த திட்டத்தை முதல்வர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இதனால், புதுச்சேரியைச் சேர்ந்த குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டிலும் திமுக உள்ளிட்ட கட்சிகள் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை அளிக்கும் திட்டம் கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இதற்கான பணிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்திருந்தது. எனினும், இன்னும் இத்திட்டம் அமலுக்கு வரவில்லை.
இந்நிலையில், புதுச்சேரியில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக என்.ரங்கசாமி பதவி வகித்து வருகிறார்.
புதுவையிலும் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை அளிக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இதற்கான ஒப்புதலை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அளித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
"புதுச்சேரியில் குடும்பத்தலைவிகள் பயன்பெறும் வகையில் வறுமைக் கோட்டிற்குகீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினேன்." என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
"பெண்களுக்கு கையில் பணமிருந்தால் அது சுயநலத்திற்காக இருக்காது, குடும்பத்திற்காக தான் இருக்கும் என்பதை உணர்ந்து இந்த அரசு இத்திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது" என்று தமிழிசை பேசினார்.
டாபிக்ஸ்