75th independence day: ஒரு லட்சம் வழக்குகள் வாபஸ் - அசாம் முதல்வர் அறிவிப்பு
நீதித்துறையின் சுமையை குறைக்கும் விதமாக நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டுவிழாவை முன்னிட்டு ஒரு லட்சம் சிறிய வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திர தினத்தை தங்களது வீடுகளில் கொடியேற்றி கொண்டாடினர்.
அசாம் மாநிலத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்று கொடியேற்றிய அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா, பின்னர் நிகழ்த்திய உரையில் கூறியதாவது, " நீதித்துறையின் நிலைமை கவலை அளிக்கும் விதமாக உள்ளது. தற்போது வரை 4 லட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் வரை கீழ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் முக்கிய வழக்குகளை விசாரிக்க கால தாமதம் ஏற்படுவதோடு, குற்றாவாளிகள் தப்பப்பதற்கான சூழலும் உருவாகிறது.
நீதித்துறையின் சுமைகளை குறைக்கும் விதமாக சமூக ஊடக பதிவு தொடர்பான வழக்குகள் உள்பட சிறிய வழக்குகள் அனைத்தையும் அசாம் அரசு திரும்ப பெறுகிறது. அதன்படி ஒரு லட்சம் வழக்குகள் வாபஸ் பெறப்படும்.
இந்த வழக்குகள் திரும்ப பெறப்படுவதன் மூலம் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் தீர்ப்பு விரைவாக வழங்குவதில் நீதித்துறை கவனம் செலுத்தும்.
அதைபோல் சிறிய வழக்குகளில் கைதாகி நீண்ட காலம் சிறையில் இருந்து வரும் நபர்கள் விடுவிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து வரவேற்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
டாபிக்ஸ்