தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Fact Check: இந்தியா கூட்டணியினரையும் ராகுல் காந்தியையும் மம்தா பானர்ஜி திட்டினாரா? – வைரல் வீடியோவின் உண்மை என்ன?

Fact Check: இந்தியா கூட்டணியினரையும் ராகுல் காந்தியையும் மம்தா பானர்ஜி திட்டினாரா? – வைரல் வீடியோவின் உண்மை என்ன?

Newschecker HT Tamil
Jun 05, 2024 06:23 PM IST

Fact Check: இந்தியா கூட்டணியினர் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திட்டியதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதன் உண்மை தன்மை குறித்து பார்ப்போம்.

Fact Check: இந்தியா கூட்டணியினரையும் ராகுல் காந்தியையும் மம்தா பானர்ஜி திட்டினாரா? – வைரல் வீடியோவின் உண்மை என்ன?
Fact Check: இந்தியா கூட்டணியினரையும் ராகுல் காந்தியையும் மம்தா பானர்ஜி திட்டினாரா? – வைரல் வீடியோவின் உண்மை என்ன?

ட்ரெண்டிங் செய்திகள்

மக்களவைத் தேர்தல் 2024

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

தேர்தல் முடிவுகள் 2024

மத்தியில் பெரும்பான்மையை நிருபித்து ஆட்சி அமைக்க 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 543 தொகுதிகளில், 292 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதில் பாஜக நேரடியாக 239 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், இந்தியா கூட்டணி 234 தொகுதிகளிலும் அவற்றில் சமாஜ்வாதி கட்சி 37 மற்றும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 29 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

வைரல் வீடியோ

இந்த நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில், "உங்களால் தான் எனக்குக் கிடைக்க வேண்டிய எம்.பி சீட்டுகள் கிடைக்காமல் படுதோல்வி என காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியினரை வசை பாடும் மம்தா தீதி. சொந்தமா ரெண்டு சீட்டு கூட வாங்க வக்கில்லாத முட்டாப்பய ராகுல் காந்தி எனவும் திட்டித் தீர்த்தார். மோடிக்கு ஒன்சைட் வெற்றி இது எனப் பாராட்டினார்." என்கிற கேப்சனோடு அந்த வீடியோ பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.

உண்மை என்ன?

இந்தியா கூட்டணியினரையும் ராகுல் காந்தியையும் மம்தா பானர்ஜி திட்டியதாக பரப்பப்படும் வீடியோவை AI கருவியை பயன்படுத்தி மொழிப்பெயர்த்தில் போலீசார் அவரை தாக்கியதாக மம்தா பேசி இருந்ததை காண முடிந்தது. இதில் ராகுல் காந்தி குறித்தோ, இந்தியா கூட்டணி குறித்தோ அவர் எதுவுமே பேசவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து அந்த வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்ததில் "Mamata Banerjee ransack the West Bengal Assembly" என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோவின் நீள வீடியோ யூடியூப் பக்கம் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததை காண முடிந்தது. இந்த வீடியோவானது ஏப்ரல் 18, 2011 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதாவது ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து இவ்வீடியோவை அடிப்படையாக வைத்து தேடியதில் "Mamata on rampage in WB Assembly" என்று தலைப்பிட்டு நவம்பர் 30, 2006 அன்று வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் குறித்து NDTV வீடியோ வடிவில் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது.

கொல்கத்தாவுக்கு அருகில் இருக்கும் ஸ்ரிங்கூரில் ஏறக்குறைய 1000 ஏக்கர் நிலங்களை டாடா மோட்டார்ஸ்க்கு அரசு வழங்கியயதை எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் எதிர்த்துள்ளது. இதை தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால் அந்த உத்தரவை மீறி மம்தா பானர்ஜி ஸ்ரிங்க்கூருக்குள் நுழைந்து போராட்டம் நடத்த முயற்சித்தப்போது போலீசார் அவரை தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மம்தா சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டமன்றத்திற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடியதில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. இதனைத் தொடர்ந்து தேடியதில் 2020 ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் தான் தகராறில் ஈடுபடவில்லை என்று மம்தா மறுத்ததையும், அதற்கு பதிலடி தரும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சியை சார்ந்த சுஜன் சக்ரபர்த்தி வைரலாகும் வீடியோவுக்கு தொடர்புடைய மற்றொரு வீடியோவை அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதையும் காண முடிந்தது.

  • வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த் 2006 ஆம் ஆண்டில் நடந்துள்ளது.
  • இந்த வீடியோவுக்கும் நடந்து முடிந்த 2024 பொதுத்தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
  • இவ்வீடியோவில் மம்தா பானர்ஜி ராகுல் காந்தி குறித்தோ அல்லது இந்தியா கூட்டணி குறித்தோ எதுவும் பேசவில்லை. மம்தா அவரை ஸ்ரிங்கூருக்குள் அனுமதிக்காத போலீஸ் குறித்தே பேசியுள்ளார்.

முடிவு:

இந்தியா கூட்டணியினரையும் ராகுல் காந்தியையும் மம்தா பானர்ஜி திட்டியதாக பரப்பப்படும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த ஆதாரப்பூர்வமான தகவல்களின்படி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

பொறுப்புத் துறப்பு

இந்தச் செய்தி முதலில் newschecker இணையதளத்தில் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்