HT Explainer: ‘மணிப்பூரில் அமலான பிரிவு 355 … 356ல் தமிழக ஆட்சியை கலைக்க கூறும் அதிமுக’ என்ன வித்தியாசம்?
Manipur 355 Article: கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய பாதுகாப்பு படை மணிப்பூர் விரைந்த நிலையில் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் 355 சட்டப்பிரிவை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏற்பட்டு வன்முறையால் இணையத்தள சேவை துண்டிக்கப்பட்டு ஊரடங்கு விதிகள் அமலாகி உள்ளது. கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்ட நிலையில் கர்நாடகாவில் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்து டெல்லி திரும்பி இருந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
மணிப்பூரில் இயல்புநிலையை திரும்ப கொண்டு வரும் வகையில் வன்முறையை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் சட்டப்பிரிவு 355-யை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, சிக்கம், நாகாலாந்து, அசாம், மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்கள் நிலப்பரப்பிலும், மக்கள் தொகையிலும் மிகச்சிறியவை. இந்த மாநிலங்களில் பழங்குடியின மக்கள் நிறைந்து வாழ்ந்து வருகின்றனர்.
மணிப்பூர் மாநிலத்தில் மேதே என்ற சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் முடிவுக்கு அங்கு வாழும் பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இடஒதுக்கீடு பிரச்னை
பழங்குடியினர் வரையறைக்குள் வராத மேதே சமூகத்தினர் மணிப்பூரில் அதிக எண்ணிக்கையில் வாழும் நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஆளும் பாஜகவின் முதலமைச்சர் பீரன்சிங் தலைமையிலான அரசு முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிராக கடந்த புதன் கிழமையன்று பழங்குடியினர் மாணவர் அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தில்தான் வன்முறை வெடித்தது. இருதரப்புக்கும் ஏற்பட்ட வன்முறையில் கட்டடங்கள், குடியிருப்புகள், வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன.
கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய பாதுகாப்பு படை மணிப்பூர் விரைந்த நிலையில் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் 355 சட்டப்பிரிவை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.
என்ன சொல்கிறது சட்டப்பிரிவு 355?
மத்திய அரசு அமல்படுத்தி உள்ள 355 சட்டப்பிரிவு என்றால் என்ன? என்ன சொல்கிறது என்பதை தற்போது விரிவாக பார்ப்போம். சட்டப்பிரிவு 355-ஐ தெரிந்து கொள்வதற்கு முன்னர் சட்டப்பிரிவு 356-ஐ தெரிந்து கொள்வது மிக முக்கியம்.
நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூட சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி திமுக அரசை கலைக்க வேண்டும் என்று பேசி இருந்தார்.
சட்டப்பிரிவு 356
சட்டப்பிரிவு 356 என்பது ஆளுநரின் பரிந்துரைப்படி, குடியரசு தலைவர் மாநில அரசுகளை கலைக்கும் அதிகாரத்தையும், அதனை தொடர்ந்து கலைக்கப்பட்ட அந்த அரசுக்கு பதிலாக குடியரசு தலைவர் ஆட்சியை அந்த மாநிலத்தில் நியமித்து ,குடியரசுத் தலைவரின் ஆலோசனைபடி அந்த கலைக்கப்பட்ட மாநிலத்தின் ஆளுநர் அந்த மாநிலத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தை கொடுத்திருக்கிறது.
குடியரசுத் தலைவர் ஆட்சி அமலான பிறகு ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்தி புதிய அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுத்திருக்கிறது. மேலும் இந்த ஆறு மாதம் என்பது நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு ஒவ்வொரு ஆறு மாதம் என்று மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப் படலாம்.
நாடு விடுதலைக்கு பின்னர் இந்த சட்டபிரிவை பயன்படுத்தி நூறுக்கும் மேற்பட்ட அரசுகளை மத்திய அரசு கலைத்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு பிரிட்சயமான சட்டப்பிரிவு 356
தமிழ்நாட்டில் இதுவரை நான்குமுறை இந்த சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டு ஆட்சிகள் கலைக்கப்பட்டது. முதலாவதாக, 1976ஆம் ஆண்டு ஜனவரியில் மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் கலைக்கப்பட்டது.
இரண்டாவதாக பிப்ரவரி 1980ஆம் ஆண்டு எம்.ஜி .ஆர் தலைமையிலான அதிமுக அரசு மீண்டும் இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் கலைக்கப்பட்டது. இந்த இரண்டு அரசுகளும் சட்டமன்றத்தில் தனி பெரும்பான்மை பெற்ற அரசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவதாக, ஜனவரி 1988 இல் வி.என். ஜானகி தலைமையிலான அதிமுக அரசு, ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் கலைக்கப்பட்டது.
கடைசியாக, நான்காவது முறையாக, ஜனவரி 1991 இல் மீண்டும் மு.கருணாநிதி அவர்கள் தலைமையிலான தனிப் பெரும்பான்மையுடன் இருந்த திமுக அரசை பிரதமர் சந்திரசேகர் அவர்கள் ஆட்சி காலத்தில் கலைக்கப்பட்டது.
பூனைக்கு மணிகட்டிய எஸ்.ஆர்.பொம்மை வழக்கு
எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்புக்கு பிறகு பிரிவு 356-ஐ பயன்படுத்தி ஆட்சியை கலைப்பது வெகுவாக குறைந்தது.
கர்நாடக முதல்வராக இருந்த எஸ்.ஆர்.பொம்மையின் ஆட்சி 1989ஆம் ஆண்டு கலைக்கப்பட்டதை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி குல்தீப் சிங் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சாசன அமர்வு விசாரித்து 11 மார்ச் 1994 அன்று தீர்ப்பை வழங்கியது.
இந்த தீர்ப்பின் மூலம் அவர்கள், ஒரு மாநில அரசை 356 ன் படி கலைத்து குடியரசு தலைவர் ஆட்சி நிறுவது என்பது நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்ட செயலே, மேலும், அவர்கள் , எதாவது ஒரு மாநில அரசு 356 ன் படி தவறான காரணங்களுக்கு கலைக்கப்பட்டால் அதில் நீதிமன்றங்கள் தலையிட்டு அதனை செல்லாது என அறிவிக்கும் உரிமையும் உண்டு என குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட முக்கியமான விஷயம் என்னவென்றால், “ஒரு மாநில அரசை ஐ 356 பயன்படுத்தி கலைத்து குடியரசு தலைவர் ஆட்சியை நியமிக்க வேண்டும் என்றால் அதற்கு முன் அது நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலை பெற வேண்டும், அதன் பிறகே குடியரசு தலைவர் தன் ஆட்சியை அந்த மாநிலத்தில் நிறுவ முடியும்.
அதுவரை அந்த மாநில அரசை இடை நீக்கம் மட்டுமே செய்ய முடியும்.” ஒருவேளை, நாடாளுமன்ற இரு அவைகளும் ஒரு மாநில ஆட்சி கலைப்புக்கு ஒப்புதல் வழங்கவில்லை எனில், அந்த மாநில அரசு மீதான இடைநிறுத்தம் என்பது இரண்டு மாதத்திற்குள் காலாவதியாகி அந்த பழைய அரசு மீண்டும் ஆட்சியமைக்கும்.
அரசியல் காரணங்களுக்காக மாநில அரசுகளை கண்டபடி கலைத்து வந்த மத்திய அரசின் அதிகாரத்தை கட்டுப்படுத்த்தும் வகையில் பூனைக்கு கட்டிய எச்சரிக்கை மணியாக அமைந்தது எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பு.
சட்டபிரிவு 355 என்றால் என்ன?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 355வது பிரிவு வெளிப்புற ஆக்கிரமிப்பு அல்லது உள் தொந்தரவுகளுக்கு எதிராக ஒரு மாநிலத்தை தலையிட்டு பாதுகாப்பதற்கான அவசரகால அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.
ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டிலும் வெளியிலும் எந்த வகையான அச்சுறுத்தலில் இருந்தும் ஒரு மாநிலத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்த சட்டப்பிரிவு மத்திய அரசுக்கு முழு அதிகாரம் அளிக்கிறது.
நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏதேனும் இடையூறு அல்லது அச்சுறுத்தல் ஏற்பட்டால், அரசாங்கம் விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்த ஏற்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் சட்டப்பிரிவு 355-ஐ பயன்படுத்தி உள்ளது மத்திய அரசு.