புதுக்கோட்டையில் தேசிய சிறப்பு பயிற்சி மையம் அமைக்கப்படுமா? - திமுக எம்.பி., கேள்வி!
DMK MP MM Abdulla: புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய சிறப்பு பயிற்சி மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்.பி., அப்துல்லா மாநிலங்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு வீரர்களின் திறமைகளை அங்கீகரித்து வளர்ப்பதற்கான தேசிய சிறப்பு பயிற்சி மையம் (National Centre of Excellence ) ஒன்றை புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறுவிட வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா இன்று (ஆகஸ்ட் 8) கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
மாநிலங்களவையில் அவர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில், "மத்திய அரசு, இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து வளர்ப்பதற்காக தேசிய சிறப்பு பயிற்சி மைய (NCOE) திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு சர்வதேச மற்றும் தேசிய அளவில் சிறந்து விளங்கும் ஏராளமான விளையாட்டு வீரர்களை தொடர்ந்து உருவாக்கி வருவதாகச் சொல்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள எத்தனையோ விளையாட்டு வீரர்களின் சாதனைகள் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டபோதும் இதுவரை ஒரு தேசிய சிறப்பு பயிற்சி மையம் கூட தமிழ்நாட்டில் நிறுவப்படவில்லை என்பது வியப்புக்குரியது.
மேலும், கடந்த இரண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கூட தமிழ்நாடு ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்து சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் மாநிலம் என்பதை வெளிப்படுத்தியது. அதேபோல கேலோ இந்தியா (KHELO INDIA) விளையாட்டு போட்டிகளின் ஒவ்வொரு பதிப்பிலும், பதக்கப் பட்டியலில் முதல் பத்து மாநிலங்களில் தமிழ்நாடு தொடர்ந்து இடம்பிடித்துள்ளது. இத்தகைய சாதனைகள் அனைத்தும் தமிழ்நாட்டின் விளையாட்டுத் திறனை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், தமிழ்நாட்டின் சிறப்பான திறமையை மேலும் மேம்படுத்துவதற்கும், ஆதரவளிப்பதற்கும் ஒரு தேசிய சிறப்பு பயிற்சி மையத்தின் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
தமிழ்நாட்டின் நிலையான செயல்பாடுகள் மற்றும் திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் சாதனைகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை, மாநிலத்தில் ஒரு தேசிய சிறப்பு பயிற்சி மையத்தை நிறுவ வேண்டியது அவசியம். இது எதிர்கால சாம்பியன்களை அடையாளம் கண்டு அவர்களை மேம்படுத்தவதற்கான வாய்ப்புகளை வழங்கும். எனவே தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டையில் இத்தகைய தேசிய சிறப்பு பயிற்சி மையம் ஒன்றை நிறுவுவதன் மூலம், இந்தியாவின் ஒட்டுமொத்த விளையாட்டுத்துறையின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்பை தமிழ்நாடு பெரும் என்பதில் ஐயமில்லை.
அதே நேரத்தில் சாதிக்க முயலும் விளையாட்டு வீரர்களுக்கு பெருமளவில் பயனளிக்கவும், விளையாட்டுத்துறையின் வளர்ச்சியை மேம்படுத்தவும் நிச்சயம் இது உதவும். எனவே, தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய சிறப்பு பயிற்சி மையத்தை விரைவில் நிறுவுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்