Zomato Report 2022: தேசத்தின் மிகப்பெரிய உணவுப் பிரியர் யார் தெரியுமா?
Zomato’s Best Customer in 2022: டெல்லியில் வசித்து வரும் உணவுப் பிரியர் ஒருவருக்கு ‘தேசத்தின் மிகப்பெரிய உணவுப் பிரியர் - 2022’ என பட்டம் கொடுத்து அழகு பார்த்துள்ளது சொமேட்டோ.
இன்றைய டிஜிட்டல் உலகில் கிட்டதட்ட எல்லாமே ஆன்லைன் ஷாப்பிங் தான் என்பது போல் மாறிவிட்டது. சிலரது வீட்டில் சமைக்க டொமேட்டோ (தக்காளி) இருக்கிறதோ இல்லையோ.. ஆனால், அவர்கள் பயன்படுத்தி வரும் செல்போனில் பிரபல ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற செயலிகள் நிச்சயம் இருக்கும்.
அதன் மூலம் வாடிக்கையாளர்கள் என்னென்ன உணவுகளை விரும்பி ஆர்டர் செய்கிறார்கள். அதில், எது டாப் 10 இடத்தை பிடித்திருக்கிறது என்ற விவரத்தை ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த நிறுவனங்கள் தனித்தனியாக வெளியிட்டு வருகின்றனர்.
இந்தாண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வரிசையில் பிரியாணி தான் தொடர்ந்து 7-வது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
அந்த வகையில் ஸ்விக்கியை தொடர்ந்து சொமேட்டோ நிறுவனமும் 2022-ம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஸ்விக்கியை போலவே இந்த செயலியிலும் பிரியாணிதான் அதிக ஆர்டர்களை பெற்றுள்ளது. நிமிடத்திற்கு 186 பிரியாணி ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன. அதோடு நிமிடத்திற்கு 137 பிரியாணி டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் பிரியாணி மீதான காதல் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது தெரிகிறது.
பீட்சா தொடங்கி மசால் தோசை, சமோசா, சிக்கன் ஃப்ரைட் ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் ஃப்ரைட் ரைஸ், வெஜ் பிரியாணி, தந்தூரி சிக்கன் போன்ற ஆர்டர்கள் பொதுவாக உணவு ஆர்டர்களில் அதிகம் இருந்ததாக தகவல்.
அதேபோல், இந்திய அளவில் டெல்லியை சேர்ந்த அன்கூர் என்பவர் சொமேட்டோ செயலியில் 2022-ல் மட்டும் சுமார் 3,330 ஆர்டர்களை செய்துள்ளார். அதாவது சராசரியாக ஒவ்வொரு நாளும் 9 முறை உணவு ஆர்டர்களை அவர் செய்திருக்கிறார் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரது பங்கை ஊக்குவிக்கும் விதமாக ‘தேசத்தின் மிகப்பெரிய உணவுப் பிரியர் - 2022’ என பட்டம் கொடுத்து கெளரவித்துள்ளது சொமேட்டோ.