தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  5 ஸ்டார் ஓட்டலில் 4 மாதம் தங்கி ரூ.23 லட்சம் பில்கட்டாமல் எஸ்கேப்பானவர் கைது

5 ஸ்டார் ஓட்டலில் 4 மாதம் தங்கி ரூ.23 லட்சம் பில்கட்டாமல் எஸ்கேப்பானவர் கைது

Karthikeyan S HT Tamil
Jan 22, 2023 10:12 AM IST

UAE Royalty Arrested: டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரச குடும்பத்தில் வேலைப் பார்ப்பவர் எனக் கூறிக்கொண்டு 3 மாதங்கள் தங்கி இருந்து பில்கட்டாமல் எஸ்கேப் ஆன நபரை போலீசார் கைது செய்தனர்.

டெல்லி லீலா பேலஸ் ஓட்டல் - கோப்புபடம்
டெல்லி லீலா பேலஸ் ஓட்டல் - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

தலைநகர் டெல்லியில் உள்ள பிராமாண்ட லீலா பேலஸ் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக்தைச் சேர்ந்தவர் போல் உடை அணிந்து கொண்டு முகமது ஷெரீப் என்பவர் வந்துள்ளார். தான் அபுதாபி அரச குடும்பத்தின் தனிப்பட்ட உதவியாளர் என்றும், வணிக வேலையாக இந்தியா வந்துள்ளதாகவும் கூறி இருக்கிறார்.

மேலும், ஐக்கிய அமீரகத்தின் அடையாள அட்டை, தனது பிஸ்னஸ் கார்டு, அமீரக ஆவணங்கள் ஆகியவற்றை ஓட்டல் நிர்வாகத்திடம் காண்பித்துள்ளார். இதையெல்லாம் நம்பிய ஓட்டல் நிர்வாகம் அவருக்கு அறை எண் 427 என்ற சொகுசு அறையை ஒதுக்கியுள்ளது.

மேலும், அவரது அறைக்கு வரும் ஓட்டல் ஊழியர்களிடம் தனது அமீரக வாழ்க்கை குறித்து கதை கதையாக அளந்து விட்டுள்ளார் முகமது ஷெரீப். பல மாதங்கள் அங்கு தங்கிய நிலையில் ஓட்டல் பில்களும் தாறுமாறாக எகிறிய வண்ணம் இருந்தன.

இந்நிலையில், சுமார் 4 மாதம் அங்கு தங்கியிருந்த முகமது ஷெரீப் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி சத்தமே இல்லாமல் அறையை காலி செய்துவிட்டு கிளம்பி விட்டார். இந்த நான்கு மாதங்கள் தங்கியது, உணவு சாப்பிட்டது, இதர சலுகைகள் அனுபவித்தது என மொத்தம் ரூ.23 லட்சத்து 46 ஆயிரத்து 413 கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது.

இதனிடையே ஓட்டலில் கட்டணம் செலுத்த நிர்வாகம் முகமது ஷெரீப்பிடம் பணம் கேட்டபோது, காசோலை வழங்கியுள்ளார். அந்த காசோலையை வங்கியில் கொடுத்தபோது தான் தெரிந்தது அந்த கணக்கில் பணம் இல்லாமல் பவுன்ஸ் ஆகி திரும்பி வந்தது.

இதையடுத்து லீலா பேலஸ் ஓட்டல் மேலாளர் ஜனவரி 14-ல் டெல்லி சரோஜினி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரையடுத்து டெல்லி போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். முகமது ஷெரீப் வழங்கிய அடையாள அட்டை, பிஸ்னஸ் கார்டு, ஐக்கிய அரபு அமீரகம் அடையாள அட்டை ஆகியவற்றை ஆய்வு செய்தபோது அனைத்தும் போலியானது எனத் தெரியவந்தது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா பகுதியில் பதுங்கி இருந்த முகமது ஷெரீப்பை டெல்லி போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஷெரீப் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுபோன்று வேறு ஏதாவது ஆள்மாறட்டத்தில் ஷெரீப் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க..

IPL_Entry_Point

டாபிக்ஸ்