Kerala Boat Accident: படகு கவிழ்ந்த விபத்து.. பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு - சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த விபரீதம்!
Kerala Boat Accident: கேரளாவில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் துவல்திரம் கடற்கரையில் நேற்று இரவு 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் 2 அடுக்கு சுற்றுலா படகு சென்று கொண்டிருந்தது. படகு புறப்பட்ட சிறிது நேரத்தில் இரவு 7 மணியளவில் தனூர் பகுதியில் சென்றபோது இந்த சுற்றுலா படகு எதிர்பாராத விதமாக நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், படகில் பயணித்த பயணிகள் அனைவரும் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் படகை உடைத்து சுற்றுலா பயணிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இரவு நேரம் என்பதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டது.
நேற்று இரவு 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், இந்த விபத்தில் கடலில் மூழ்கி 5 குழந்தைகள், பெண்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மீட்பு படையினருடன் உள்ளூர் மீனவர்களும் இணைந்து மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. சொகுசு படகில் அதிகம் பேர் பயணம் செய்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது என முதல்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. சொகுசு படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, கேரளாவில் சுற்றுலா படகுகளை இயக்க மாலை 5 மணி வரையே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்துக்குள்ளான படகு இரவு 7 மணி வரை கடலில் பயணம் மேற்கொண்டது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரதமர் இரங்கல்
சொகுசு படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்ததோடு நிவாரணமும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்