Cyclone Biparjoy: நெருங்கும் பிபர்ஜாய் புயல்..உச்சகட்ட உஷார் நிலையில் குஜராத் அரசு!
அதி தீவிர புயலாக உருமாறிய பிபர்ஜாய் புயல் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறை முகம் அருகே நாளை மறுநாள் மதியம் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அரபிக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தற்போது அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த 'பிபர்ஜாய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள 'பிபர்ஜாய்' என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும்.
அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பிபர்ஜாய் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் நாளை ஜூன் மறுநாள் (ஜூன் 15) கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று குஜராத் மாநிலம் போர்பந்தருக்கு 320 கி.மீ. தென்மேற்கில் புயல் மையம் கொண்டிருந்தது. தொடர்ந்து, மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. தற்போது அதி தீவிர புயலான பிபர்ஜாய், மிக தீவிர புயலாக வலுவிழந்தது; வரும் 14ம் தேதி காலை வரை வடக்கில் நகர்ந்து, அதன் பின் வடக்கு-வடகிழக்கில் நகர்ந்து செல்லும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிபர்ஜாய் அதி தீவிர புயலாக உருமாறியதை அடுத்து குஜராத்தின் கடலோர மாவட்டங்களான கட்ச், போர்பந்தர், தேவ்பூமி துவாராக, ஜாம்நகர், ஜீனாகத், மோர்பி உள்ளிட்ட இடங்களில் கடற்கரை அருகே வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்தப் புயல் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறை முகம் அருகே நாளை மறுநாள் மதியம் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்க உள்ளதையொட்டி வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அப்போது, 135 கி.மீ முதல் 150 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதையொட்டி செளராஷ்டிரா, கட்ச் பிராந்தியங்களில் ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்யும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. போர்பந்தரில் உள்ள 31 கிராமங்களை சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த புயல் காரணமாக குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கோவா கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. பிபர்ஜாய் புயலால் மகாராஷ்டிர மாநிலத்தில் தானே, மும்பை, பால்கர் கடற்கரை பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு கடல் அலைகள் சற்று கொந்தளிப்புடன் காணப்படுகின்றன.
பிரதமர் ஆலோசனை
பிபர்ஜாய் புயலின் மீட்பு நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், புயல் ஆபத்து அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்படுவதை உறுதிசெய்யும்படி மூத்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மின்சாரம், தகவல் தொடர்பு, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை பாதிக்கப்பட்டால் அதை உடனடியாக சரிசெய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்