Vijender Singh: மாலிக்கின் ஓய்வு முடிவு… ‘இனிமே எப்படி பொண்ணுங்கள…’ இது கருப்பு நாள் - பாஜகவை சாடிய விஜேந்தர் சிங்!
கீழ் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், பெரும்பாலும் பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், அவர்கள் "நடத்தை விதிமுறைகளால்" "தண்டிக்கப்படுவார்கள்" என்பதால் அனைவரும் பேச பயப்படுகிறார்கள் என்று சிங் கூறினார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டிற்கு உள்ளானவருமான பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய கூட்டாளியான சஞ்சய் சிங் அடுத்த மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் விளையாட்டுத் துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரும், பிரபல மல்யுத்த வீரருமான சாக்ஷி மாலிக், கூட்டமைப்பின் தலைவராக சஞ்சய் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, தனது ஓய்வை அறிவித்தார். மேலும் அவர் தன்னுடைய எதிர்ப்பை காட்ட தனது காலணியை மேஜை மீது வைத்து அழுதார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய விஜேந்தர் சிங், "ஒரு வீராங்கனையாக, அவரது வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற அவர் தனி ஒருத்தியாக, நீதி கேட்டு நின்றார். ஆனால் அவருக்கு அது கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். இதில் ஒட்டுமொத்த விளையாட்டுத் துறையினரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதன் பிறகு, பெற்றோர்கள் தங்கள் மகள்களை ஸ்டேடியத்திற்கு அனுப்புவார்களா? இது ஏன் நடந்தது என்று பிரதமர், துணை ஜனாதிபதி, ஜனாதிபதி அனைவரும் வந்து பதில் சொல்ல வேண்டும்
விளையாட்டு வீரர்களின் மௌனம் குறித்து பேசிய சிங், விளையாட்டு வீரர்கள் கீழ் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அனைவரும் பேச பயப்படுகிறார்கள்.
அதுமட்டுமல்ல, அவர்களில் பெரும்பாலும் பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், அவர்கள் "நடத்தை விதிமுறைகளால்" "தண்டிக்கப்படுவார்கள்" என்பதாலும் அனைவரும் பேச பயப்படுகிறார்கள். மாலிக் ஓய்வு முடிவை அறிவித்த நாள், விளையாட்டுத்துறை வரலாற்றில் ஒரு கருப்பு தினம்” என்று சிங் கூறினார்.