Rakesh Jhunjhunwala: இந்திய பங்கு சந்தையின் தந்தை ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்
தொழில் அதிபரும், பிரபல பங்குசந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.
மும்பை: இந்தியாவின் வாரன் பஃபட் என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக்குறைவால் மும்பையில் இன்று காலை காலமானார்.
இந்திய பங்கு சந்தைகளில் மிகப்பெரிய முதலீட்டாளராக அறியப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக்குறை காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 62.
1960 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. 5000 ரூபாய் முதலீட்டில் பங்கு சந்தையில் முதலீடு செய்து தொழிலை தொடங்கிய ராகேஷின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.42 ஆயிரம் கோடியாக வளர்ந்துள்ளது.
இந்தியாவின் வாரன் பஃபட் என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பல நிறுவனங்களையும் நிர்வகிக்கும் பதவியில் இருந்தவர். அவர் தொடங்கிய ஆகாசா ஏர்லைன்ஸ் விமான போக்குவரத்து நிறுவனம் கடந்த 7 ஆம் தேதி முதல் அதன் சேவையை தொடங்கியது. இந்நிலையில் அவரது மரணம் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மரணத்துக்கு தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ராகேஷ் ஜுன்ஜுன்வாலா நிதிச் சந்தைகளில் அழியா பங்களிப்பை விட்டுச் சென்றுள்ளார் என்றும் இந்தியாவின் முன்னேற்றத்தில் மிகுந்த ஆர்வமுடன் இருந்தார் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.